ஐங்குறுநூறு தமிழர்
எட்டுத்தொகை கிடைத்த தோர் வரமே
அவற்றி னுறைந்த ஐங்குறுநூ றறிய,
ஐந்திணைக்கு நூற் பாட்டு வரைந்து
வடித்துக் கொடுத்த புலவ ரைந்து.
பத்துப் பத்தாய் பகுத்தே பாடல்
நூற்று ஆழ்மிகு அடி அறிந்தே
அவற்றிற் கோர் அணி நிறை
பெய றுரைத்து பெய ரெடுத்தார்.
மூன்றடி சிற் றெல்லை இன்
ஆறடி பேரெல்லை அகம் பதி
பெருந் தேவர் கடவுள் வாழ்த்து
பின் கொடுத்த முதற் பாட்டு.
இஃதொன்று சேர்ந்து ஐ நூற்றொன்று
எட்டா பாடல் இரண் டுண்டு
மலை கரைய மருதம் ஓரம்போகி
கட லுணர நெய்தல் அம்மூவன்.
கவி சொட்டும் குறிஞ்சி கபிலர்
மணல் மகிழும் பாலை ஓதலாந்தை
காடும் நாணும் முல்லை பேயன்
திணை நிறை அகம் மட்டும்.
பா பெற்றே ஆ சிரியப்பா
திணை மருதம் முதல் வைத்து
இந்திர விழா இன்செய்தி யளித்து
தனி சிறப்பு தன் னுடைத்ததே.
சமூக சிந்தனை உண்மை நோக்கு
காண கிடைக்க பல நூறு
‘பசியில் ஆகுக பிணிசே நீங்குக ‘
வறுமை காரணம் தீசெயல் தொடர.
‘விளைக வயலே வருக இரவலர்’
வயல் செழிக்க இரவலர்க் கீதல்
‘கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்’
எந்திரம் கொண்டார் கன்னல் சாற்றெடுக்க.
‘அரசுமுறை செய்க களவில் லாகுக’
அர சுயர களவு ஒழிக்க
உயிரிய லறிவு உயர்ந்து காண
‘தன்பார்புத் தின்னும் அன்புஇல் முதலை’
முதலை உண்ணும் தம் பிள்ளை.
‘தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு’
சேய்ப் பிறக்க நண்டு தாயிறக்கும்
தொகுக்க கிழார் சேரன் விரும்ப
தொகுப்பித்த மாந்தரஞ் சேரல் இரும்பொறை
அறம் அருள் மகளிர் மாண்பு.
ஒழுக்கம் வாழ்வு காதல் பழக்கம்
எளிதாய் இனிதாய் உள் நிறைத்ததே.