13ஆதாமின் அப்துல்லா – பொள்ளாச்சி அபி
அன்றைக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று நள்ளிரவு முதலே வானொலியின் அறிவிப்பு தொடர்ந்து கொண்டிருக்க, வீதிகளெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது.
விடுதலைக்காக அயராதுழைத்த அண்ணல் காந்திக்கு ஜே..என ஆர்ப்பரிப்புகள் கேட்டுக் கொண்டேயிருந்தன. நாடெங்கும் கும்மாளங்கள் கொண்டாட்டங்கள்..,மக்கள் முகங்களில் வெள்ளையனை விரட்டிவிட்ட வெற்றிக் களிப்புகள்.
தலைவர்களின் உரையில் காந்திஜியின் உழைப்பு பிரதானப் படுத்தப்பட்டது. அவரோ கல்கத்தாவில் ஒரு ஏழை முஸ்லிம் வீட்டில் அமர்ந்து நூல் நூற்றுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.மேலும்,சுதந்திரதினச் செய்தி என்று தன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் சொன்னதாகத் தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன.
இது துக்கநாள் என்று ஈ,வே.ராமசாமி சொல்ல,இது துக்கநாள் அல்ல என்று அண்ணா துரையும்,இது கள்ள மார்க்கெட் காரர்களின் சந்தை என ஜெயப்பிரகாஷ் நாராயணனும் சொல்லிக் கொண்டிருந்தனர்.
பூனாவில்,ஹிட்லரின் நாஜிக்கட்சியின் கொடியிலுள்ள சின்னமான ஸ்வஸ்திக் பொறித்த ஆரஞ்சு வண்ண முக்கோணக் கொடியை,நாதுராம் கோட்சே ஏற்றிவைத்து,சிந்து முதல் கிழக்கு பர்மா வரை,திபெத் முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதி,நமது கனவு தேசமான அகண்ட பாரதம், “ஹிந்துஸ்தானாக” மாறவேண்டும்.அதற்காக உழைக்க வேண்டும் என்று உரையாற்றியதாகவும், செய்தித்தாள்கள் சூடு கிளப்பிக் கொண்டிருந்தன.
இதனிடையே முகமது அலி ஜின்னாவை கவர்னர் ஜெனரலாகக் கொண்டு,பாகிஸ்தான் தனிநாடாகப் பிரிக்கப்பட்டு விட்டது எனவும்,இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும், அங்குள்ளவர்கள் இந்தியாவிற்கும் குடியேறத் தடையொன்றும் இல்லை என்றும் அறிவிப்புகள் வெளியாகி யிருந்தன.
சுதந்திர நாட்டிற்கெதிரான பல்வேறு தகவல்களால்,பொதுமக்கள் குழப்பத்தின் உச்சியில் இருந்தனர். இந்தியாவிலிருந்து முஸ்லீம்களும், பாகிஸ்தானிலிருந்து இந்தியர்களும் வெளியேறுவதும்,வெளியேற்றுவதுமான சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், நாகூர் மீரானைத் தேடிக் கொண்டு,அவரது பழக்கடைக்கு வந்தார் நண்பர் காசீம். அவரது முகம் முழுக்க மகிழ்ச்சி அப்பிக் கொண்டிருந்தது.
“பாய்..இப்படியே பழக்கடையிலேயே காலத்தை ஓட்டிடப் போறீங்களா..?”
காசிமின் பேச்சில் இருந்த புதிர்,அதிசயமாய் இருந்தது நாகூர்மீரானுக்கு.“என்ன பாய்..திடீர்னு இப்படிக் கேக்குறீங்க..? ஏதாவது விசேஷமா..?”
காசிம் இயல்பான உற்சாகத்துடன் சொன்னார், “நான்,என் குடும்பத்தோட பாகிஸ்தானுக்கு போறேன் பாய்..”
நாகூர் மீரானுக்கு இப்போது அதிர்ச்சி..“என்ன திடீர்னு இப்படிச் சொல்றீங்க..,அரசாங்கத் தபால்துறையிலே வேலை,சொந்த வீடு,மனைவி,அழகான இரண்டு பெண்,ஒரு ஆணுன்னு குழந்தைங்க இருக்கு.நிறைவான வாழ்க்கைதானே பாய் உங்களுக்கு.அப்புறமெதுக்கு,திடீர்னு பாகிஸ்தானுக்கு போகணும்.?”
தனது முடிவில் உள்ள நியாயத்தை,மிக்க மகிழ்ச்சியுடன் விளக்கிச் சொல்வதற்கான ஆயத்தத்தில் காசிமின் குரல் துள்ளலுடன் வந்தது. “மீரான் பாய்.நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனாப் பாருங்க..பாகிஸ்தான்ங்கிறது முழுக்க,முழுக்க முஸ்லீம்களுக்கான தேசம்.முஸ்லீம்களுக்கான தேசங்கிறதனாலே அங்குதான் நமக்கு பாதுகாப்பு.அங்கே போயிட்டா போதும்,நமக்கு இங்கயிருக்கற மாதிரியே,ஏன் இதைவிட சுதந்திரத்தோட, வளமான வாழ்க்கை அங்கியும் கிடைக்கும். அங்கயிருக்கற கவர்ன்மென்ட்டே எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிக் குடுத்துடும்.. இங்கிருந்து கஷ்டப்படுவதைவிட,நீங்களும் எங்களுடனே வந்து விடுங்களேன்..,!” காசிமின் கண்கள் திரண்ட ஒளியால் மின்னுவது தெரிந்தது.
என்னதான் இருந்தாலும் பழகிய மண்ணைவிட்டுச் செல்வதில் நாகூர்மீரானுக்கு துளிக்கூட இஷ்டமில்லை.அந்நிய மண்ணின் அசௌகரியங்களை அவர் ஏற்கனவே அனுபவித்த -வராயிற்றே. “ஏன் பாய்.? நீங்க சொல்ற வசதி எல்லாமே நமக்கு இங்கியே கிடைக்காதா..? நாம அதுக்குத்தானே சுதந்திரம் வாங்கி இருக்கிறோம்..?”
ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல,வெடித்துச் சிரித்தார் காசிம்.நாகூர் மீரானின் கேள்வி எவ்வளவு அப்பாவித்தனமாக இருக்கிறது என்ற தொனியில், என்ன பாய்..,நல்லா ஓதிப்படிச்சிருந்தா மட்டும் போதுமா..? நாட்டு நடப்பும் தெரிஞ்சிருக்க வேணாமா..?” காசிமின் கேள்வி, நாகூர் மீரானைக் குழப்பத்தில் தள்ளியது.
‘தனது மார்க்கப் படிப்பு இதுவரை எங்கேயும் குறை காண முடியாதது.தொழுகை செய்வதிலாகட்டும்,தொழுகையை நடத்தி வைப்பதிலாகட்டும்.பயானுக்கு செல்லும்போது குரானிலிருந்தும், இஸ்லாமிய வரலாறுகளிலிருந்தும் தான் எடுத்துச் சொல்லும் கருத்துக்களை,ஒரு ஞானியைப் போல எடுத்துச் சொன்னீர்கள் என்று, தன்னைச் சந்தித்தவர்கள் எல்லாமே பாராட்டித்தான் இருக்கிறார்களேயொழிய,ஒருவரும் குறைசொன்னதில்லையே.., ஒரு இஸ்லாமியனுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்..?
இவ்வளவையும் கடந்து,அரசியல் என்பது தனக்கெதற்கு..? என்று இருந்துவிட்டதுதான் தவறாகப் போய் விட்டதோ..?
இப்போது,காசிம் கேட்பதைப்பார்த்தால்,ஒரு அஞ்ஞானியைக் குறிப்பது போலல்லவா கேட்கிறார்.?’ நாகூர்மீரானின் மனம் கேள்விகளில் சிக்கித்தவித்தது.
காசிம் தனது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.“நம்ம தலைவரு முகம்மது அலி ஜின்னா,போன இருபத்தேழு வருஷமா முஸ்லிம்களுக்கு தனி மாநிலங்கள் வேணும்னு கேட்டுகிட்டு இருக்காருங்கறது உங்களுக்குத் தெரியுமா..? தெரியாதா..?”
நாகூர்மீரானுக்கு உண்மையாகவே தெரியவில்லை.மௌனமாக காசிமைப் பார்க்க, “சரி பாய்..உங்களுக்கு கொஞ்சம் விலாவாரியாவே சொல்றேன்.முஸ்லீம்கள் பெருவாரியா இருக்குற மாநிலங்களைத் தனிமாநிலமாப் பிரிக்கணும்னு 1920.ஆம் வருஷமே மத்திய சட்டசபையிலே தீர்மானம் வந்தப்போ ஜின்னாவோட சுயேட்சைக் கட்சி அதை ஆதரிச்சுச்சு. விபின் சந்திரபால் நமக்கு ஆதரவா நின்னார்.ஆனா மதன்மோகன் மாளவியா அதை ஒத்துக்கலை. காங்கிரசும் ஏத்துக்கலை.
இதுக்கப்புறம் கொஞ்சம் வருஷம் கழிச்சு,மாகாண சட்டசபைத் தேர்தல்லே,தனித் தொகுதி வேணும்ணு கேட்டதை காங்கிரசு ஒத்துக்குச்சு. 1935,அப்புறம் 1937.லே நடந்த தேர்தல்கள்ளே முஸ்லீம் லீக்கு பெருவாரியான தொகுதிகள்லே ஜெயிச்சாலும் ஆட்சி அமைக்கிற அளவுக்கு அதுபோதலை.
இந்த சமயத்துலே ஐக்கிய மாகாணத்துலே முஸ்லீம் லீக்கோட சேர்ந்து ஆட்சி அமைச்சுக்க காங்கிரசு விரும்பலை.நம்மளை திட்டமிட்டே ஒதுக்கிட்டாங்க பாய். நிலைமை இப்படி யிருக்கும் போது காங்கிரசு கட்சி ஆட்சியமைத்த இடத்துலேயெல்லாம், முஸ்லீம்களோட பிரச்சினையையோ, அவங்களுக்கான நலத்தையோ அவங்க கண்டுக்கவே இல்லை.
இதைப்பத்தி நேருகிட்டே ஜின்னா பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோத்துப் போச்சு. அதுமட்டுமில்லே பாய்.முஸ்லிம்களோட பிரச்சினை என்னான்னே அவருக்கு சொல்லத் தெரியலைன்னும், எனக்குப் புரியற மாதிரி அவருக்கு சொல்ல வரலைன்னும் நேரு எப்படிக் கிண்டலடிச்சாரு தெரியுமா..?
இந்தமாதிரி பல சம்பவங்கள்ளேயும் மனசு நொந்து போயித்தான்,காங்கிரசு எல்லாருக்குமான கட்சியில்லை.அது இந்துக்களுக்கான கட்சி..ன்னு ஜின்னா சொன்னாரு. இந்துக்களுக்கான கட்சின்னா அபுல்கலாம் ஆசாத்தை நாங்க தலைவரா வெச்சிருப்போமா..ன்னு காந்தியும் கேட்டாருதான்.
ஆனா,ஒரு முசல்மானா இருக்குற,நம்ம அபுல் கலாம் ஆசாத்தும்,அவங்கெல்லாம் சொல்லுற மாதிரியே, “இந்தியர்கள் மத்தியிலே பிரிவினையைத் தூண்டுறாரு ஜின்னா..”ன்னு குத்தம் சொல்றாரு.
நம்ம ஜின்னாவே சொல்லிட்டாருன்னா..அப்புறம் அதுலே உண்மையில்லாம இருக்குமா..? இப்பப் பாருங்க,இந்தியா பூராவும் இந்து முஸ்லீம் கலவரம் சின்னதும் பெரிசுமா நடந்துட்டே இருக்கு.அங்கெல்லாம் கொஞ்சம்கூட அமைதியே இல்லை.இத்தனைப் பிரச்சினைக்கு அப்புறமும்,இங்க எப்படியும் காங்கிரசு தலைமையிலத்தான் ஆட்சி வரும்.அதுலே இந்து முஸ்லிம் சேர்ந்து வாழறது சாத்தியமே இல்லே. அவங்கவங்களுக்கு உண்டான இடத்துலே இருந்துகிட்டா அமைதியா வாழலாம்னு நமக்கு பாகிஸ்தான்னு தனிநாடே வாங்கிக் கொடுத்துட்டார் ஜின்னா.நம்ம தேசம்னு ஒண்ணு வந்தாச்சு.இனி அங்க போயி வாழறது தானே ஜின்னாவுக்கும் சரி,நமக்கும் சரி பெருமையா இருக்கும்.அதனாலத்தான் குடும்பத்தோட அங்க கிளம்பிட்டோம்..” காசிம் உற்சாகமாகச் சொல்ல, தனிநாடு என்று போவதைவிட,ஜின்னாவின் மீது இருக்கும் அளவற்ற பக்தியினால்தான் காசிம் இந்த முடிவை எடுத்திருப்பதாக நாகூர்மீரானுக்குத் தோன்றியது.
தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும், அபிமானமும் வைத்திருக்கும் சாமானிய மனிதர்கள்,அதன் காரணமாகவே சமயங்களில் தவறான முடிவையும் எடுக்கிறார்களோ..? என்றும் நாகூர்மீரானுக்குத் தோன்றியது.
தபால்துறையில் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு,சொந்த வீட்டையும் விற்றுவிட்டு பாகிஸ்தான் செல்கிறேன் என்று காசிம் சொன்னது நாகூர்மீரானுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஏனோ அவர்மீது ஒரு இனம்புரியாத ஒரு வெறுப்பு தனக்குள் பரவிக் கொண்டிருப்பதை உணர்ந்த நாகூர்மீரான்,கண்களை மூடிக் கொண்டார்.
நேதாஜியின் நாற்பத்து ஏழாவது பிறந்தநாள் ரங்கூன் நகரத்திலுள்ள ஜுபிலி அரங்கத்தில் கொண்டாடப்பட்டபோது, வேடிக்கை பார்க்கப் போன நாகூர்மீரானுக்கு நன்றாக நினைவு இருந்தது. அன்றைக்கு, நேதாஜியின் இந்தியதேசிய இராணுவத்திற்காக,அவரது எடைக்கு நிகராக மக்கள் தங்கத்தை வாரிவழங்கினர். அதேபோல் பணத்தையும் வழங்கினர்.இதனை வழங்கியவர்கள் பொதுவாகத் தமிழர்கள் என்றுதான் இருந்ததேயொழிய அதில்,இந்து முஸ்லீம் என்ற பாகுபாடே இருக்கவில்லை.
அதற்கு ஒருவருடம் முன்பு,நாற்பத்தியாறாவது பிறந்தநாளின் போது நேதாஜி ரங்கூன் வந்தபோதும் லட்சலட்சமாய் மக்கள் நிதியளித்தனர்.அதிலும் நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட ஒரு மாலையை,போராட்ட நிதிக்காக மூன்றரை லட்சரூபாய் கொடுத்து அமீர் ஹம்சா என்பவர் ஏலத்தில் எடுத்ததாகவும் கேள்விப்பட்டிருந்த நாகூர்மீரானுக்கு,இந்து-முஸ்லீம் என்று காசிம் பிரித்துப் பேசியது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
“என்ன பாய்..? நான் உங்ககிட்டேதான் கேக்குறேன்.பதில் சொல்லாம கண்ணை மூடிகிட்டீங்க..?” காசிமின் குரல், நாகூர்மீரானின் செவிகளில் எதிரொலித்த விநாடியில், கலைந்த தலை,கிழிந்த உடை,பட்டினியால் இளைத்துக் கறுத்த தேகத்துடன் யார் முன்போ,பிச்சைக்காக கையேந்தியபடி, காசிம் நிற்பதுபோல ஒரு காட்சி மனதுக்குள் திடீரென்று தோன்றி மறைய,நாகூர்மீரான் ‘திக்’கென அதிர்ந்தார். அந்த அதிர்ச்சியால் சிலிர்த்தது உடல். ‘சம்பந்தமில்லாமல், இதென்ன இப்படியொரு காட்சி,மனசுக்குள் வந்துபோகிறதே..’ “யா..அல்லா..!” நாகூர்மீரானின் முனகலை உற்று நோக்கிய காசிம், “பாய்..என்ன பாய்.., நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலை.?”
நாகூர்மீரான் தலையசைத்து வேகமாக மறுத்தார். “இல்லே பாய்..பாகிஸ்தானுக்கு நான் வரலை..என்னைக் கேட்டா நீங்களுமே அங்க போகாமே,இங்கியே இப்படியே இருந்துடறது நல்லதாப் படுது எனக்கு..!”
“ஏன்..?”
“இது நாம பொறந்து வளந்த மண்ணு..இதுதான் நம்ம எல்லாருக்குமான நாடு, இந்து முஸ்லீம்னு நீங்க பிரிச்சு பாக்குறது ரொம்பத் தப்புன்னுதான் எனக்குத் தோணுது. ஏன்னா..அஞ்சு தலைமுறைக்கு முன்னாலே நாம இந்துவா இருந்தமா முசல்மானா இருந்தமா..ன்னு யாருக்குத் தெரியும்..? இப்ப எனக்குப் புடிச்ச மாக்கத்துலே நான் இருக்கேன். அதேமாதிரி இந்துக்களும் அவங்களுக்கு புடிச்ச மார்க்கத்துலே இருக்காங்க..மார்க்கந்தானே பாய் வேறவேற..மத்தபடி நாமெல்லாம் மனுஷங்கதானே..? நாம ஈமானோட இருந்தாலே போதும். நடக்கறதெல்லாம் நல்லாவே நடக்கும்.இன்ஷா அல்லா..!”
காசிமின் முகம் சுருங்கிப் போனது. ஒன்றும் பேசாமல் சில விநாடிகள் நின்றிருந்த காசிம்,திடீரென்று “நான் வர்றேன்..” என்றபடி,நாகூர் மீரானின் பதிலுக்காக காத்திராமல், வேகமாகத் திரும்;பிப் போய் விட்டார்.அதற்குப் பின் காசிமை அவர் பார்க்கவில்லை.
---------- தொடரும்
வாசிப்பவர்களின் புரிதலுக்காக..
----------------------------------------------------
ஈமான் “இவ்வுலகில் நடைபெறும் நன்மை தீமை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டபடியேநடக்கின்றன என்று முழுமையாக நம்ப வேண்டும்”
இன்ஷா அல்லா-இறைவன் நாடினால்