ஞாபகமற்றவன்

உன் கவிதைகளால்
இட்டு நிரப்ப முடியாத
தூரத்தில்தான் நம்
இடைவெளி இருக்கிறது...
உன் பழைய குறுஞ்செய்திகள்
மெல்ல மெல்ல அழிக்கும்
எனக்குள்
சிணுங்கிக் கொண்டே இருக்கிறது
என் அகத்திரை...
உன் ரயில் சிரிப்பை
எத்திசையில் கடக்க விட...
கிடந்து தவிக்கும் மாலை நேர
அலைபேசிக்குள் அதிர்வற்று கிடக்கிறது
ஒரு சவப்பெட்டி...
நம் பின்னிரவு பேச்சுக்களை
திறந்து விட்டு விட்டேன்..
அது சிறகு முளைத்த வெளியாகி
காணாமலே போய் விட்டன.....
உன் புகைப்படங்களால்
என்னை மீட்டெடுக்க
முடிவதில்லை.. அது கொண்ட
கண் காணாத தேசத்தில்தான்
பார்வை இழக்கிறேன்...
இனி ஒரு சந்திப்பு நமக்கு
சாத்தியமில்லை... அதை
உன் ஜன்னலோரம் வந்து கூறி விட
முடிவெடுத்த மௌனத்தில்தான்
பறவையும் ஊமையாகும்
என்றே தெரிகிறது...
எங்கிருந்து வந்தாய்....
எதற்காக அமர்ந்தாய்...பின்
ஏன் பறந்தாய்....
வசந்த காலத்திலும்
இலை உதிர்க்கும்
மரத்தினடியில் நான் வெறும்
நிழலாகிறேன், கேள்விகளோடு.........
எல்லாம் மறந்து விடத்தான்
நினைக்கிறேன்...
மறந்தும் விடுகிறேன்...
ஆம்... நான்
இப்போது ஞாபகமற்றவன்,
மீண்டும் உன்னையே காதலிப்பது
எனக்கு தெரிய போவதேயில்லை
இனி இந்த வாழ்க்கை
முழுக்க......
கவிஜி