புரியாத புரிதல்கள் - உதயா

பற்றற்று கிடந்த
பாறைதனில்
பார்வை உளியால்
உணர்வுகளை
சுனையாக்கினாள்

எனக்கே தெரியாமல்
எனக்குள் மறைந்திருந்த
எதை எதையோ
என்னில் தோன்றவைத்து
நான் என்பதை விளக்கினாள்

காதலை வெளிப்படுத்திய
கணத்தில் இருந்து
அவள் எனக்கு மனைவி
நான் அவளுக்கு உலகம்

ஈன்றோர்களை மதித்து
நாங்கள் பார்வை தீண்டலை
சில திங்களுக்கு அப்பால்
தள்ளி வைத்தோம்

விடியும் நாட்பொழுதில்
அவளின் அலைபேசி
என் குரலொலியை உமிழாவிடின்
அன்றைய வினாடிகள் கூட
அவளின் கண்ணீரில் மடிந்து இருக்கும்

என் கல்லூரின்
தேர்வு தினங்களில்
அவளின் விழிப்பும் மட்டும்
என்னை தாண்டி
இரவினை சூழ்ந்திருக்கும்

ஏதோனும் ஒரு சோர்வு
என்னை தீண்டும் முன்னே
அவளுள் துடிப்புகள்
யாத்திரைகள் முடித்திருக்கும்

அவள் தவறி விழுந்தால் கூட
அம்மா என்றோ அப்பா என்றோ
அழைப்பதில்லை
மாமா மாமா என்று
என்னை மட்டும் அழைக்காமல்
ஒரு நொடி கூட இருந்ததில்லை

எத்துனையோ முறை
அவள் தந்தையின் கரங்கள்
அவள் தேகத்தை பதம் பார்த்தும்
அவரின் உணர்ச்சிகள் மட்டுமே
மரத்துக் கிடக்கிறது

அனைத்தையும் சகித்து
வாழும் அவளுக்கு
இனி என்னை
காணும் தருணம் மட்டும்
விடையற்ற புதிராகிவிட்டது

காலனின் பிடியில் இருந்து
இருமுறை தப்பித்த அவள் மீது
கருணை மட்டும் பிறக்கவில்லை
கடவுளுக்கும் காலனுக்கும்

அவளுக்கு இருதிங்கள்
கெடுவைத்துக் காத்திருக்கும்
காலனுக்கு என்னுயிர் மட்டும்
அவன் கண்ணுக்கே தெரிவதில்லை

பாதையற்ற இடத்தில்
எங்கள் பயணங்கள் மட்டும்
தேங்கி நிற்கிறது

அவள் பறந்து சென்ற பின்பு
என்னை ஆதரிக்க
எனக்காய் ஓர் பந்தத்தை
தேடுகிறாள் பைத்தியக்காரி

பாவம் அவளுக்குத்தான்
இன்னும் தெரியவில்லை
மரணம் எனைத் தொடாமல்
அவளை நெருங்க கூட
முடியாது என்று

எழுதியவர் : உதயா (5-Jan-16, 9:53 pm)
பார்வை : 114

மேலே