எழுதப்படாத கவிதை
எங்களிடம் எழுதப் படாத
கவிதைகள் நிறையவே உள்ளன
தன் மனைவியை
ஆண்டையின் தோட்டத்தில்
உள்ளிருத்தி விட்டு
வெளியே தகித்துக் கொண்டிருந்தவன்
கவிதை எழுதியதில்லை
குளத்தில்
அறியாமல் இறங்கியதற்காக
மகளின் பிஞ்சுக்கைகளில்
பிரம்பால் அடித்தீர்களே
அது எப்படி கவிதை எழுதும்
மாட்டுத்தொட்டியிலும் இடாத
முந்தாநாள் பலகாரங்களை
எம் மக்களின்
கூலி வாங்கும் கூடையில் இட்டீர்களே
அவர்கள்தான் எப்படி எழுதுவார்கள் ?
வியாதியஸ்தர்களின்
பீ மூத்திரம் அள்ள
உங்களுக்கு காவலிருக்க
மாட்டுத் தொழுவத்தில்
தங்க வைக்கப்பட்ட எம் பிள்ளைகள்
எங்ஙனம் கவிதை எழுதியிருக்க இயலும்
ஒரு குவளையோடு
நீங்கள் பெஞ்சில் அமர்ந்திருக்க
வேறு குவளையோடு
கால் மடக்கி கீழமர்ந்தவன்
எந்த சூழலில் கவிதையை தேடுவான்
எல்லா தெய்வங்களையும்
உங்களிடம் வைத்துக் கொண்டவர்கள்
எல்லாக் கலைகளையுமா
விட்டு விடுவீர்கள் ?
அதனால்தான் உங்கள் தெய்வங்களையும்
நாங்கள் வணங்குவதில்லை
உங்கள் கலைகளையும்
நாங்கள் போற்றுவதில்லை
எங்களிடம் எழுதப் படாத
கவிதைகள் நிறையவே உள்ளன
தயாராய் இருங்கள்
நாங்கள் எழுதும் நாளில்
அவை உங்களுக்கு
நிச்சயம் கவிதையாய் இராது.