எப்படி சொல்வது
சில இடையர்களும்
சில எருமைகளும்
சில ஆடுகளும் தங்கள்
எஜமானர்களின்
வீடுகளுக்கு
தொழுவத்திற்கு ..
பட்டிக்கு ..
திரும்பிக் கொண்டிருக்கின்ற
அந்தி மஞ்சள் வெயில் நேரம் ..
..
குடிசைகளின் மேல் வந்து பரவும்
புழுதிப் படலம்..
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சில குடிசைகளின் வெளியே
கால்கள் நீட்டி சிறு உலக்கைகளில்
வெற்றிலை பாக்கு இடிக்கும்
நைந்த பாட்டிகள்..
..
யாரேனும் ஒரு குடிசையில்
அதிர்ந்து பேசினாலும் கூட
அத்தனை வீதிக்கும் கேட்கும்
அமைதி..
இன்னும் வயல்களுக்குப் போனவர்கள்
திரும்ப வில்லை ..
மறுபடியும் வேலைக்கு வெளியூர் செல்ல
ஆயத்தப் படுத்திக் கொள்ள சொல்கின்ற
சாதியின் பாதுகாவலரான
அப்பாவிடம் ..
எப்படி சொல்வது ..
"இம்முறையாவது ..
முடிவு சொல்லிவிட்டு
போ"
என்று சொன்னவளை பற்றி..
..
சிறு சப்தம் கூட..
போதும்..
வீட்டு வாசலில்
ஊர் கூட!