ஒரு கூட்டுப்பறவைகள்

அது ஒரு ஆனந்த
பூங்காற்றுப் பொழுது !
நிலாச்சோறூட்டி
நிறை கூட்டிய அம்மா
நெஞ்சுரம் தளைக்க
நடை பயிற்றும் அப்பா
வடைக்காக்கா நரி
கதை சொன்ன பாட்டி
வார்த்து வளர
புத்தி பகரும் தாத்தா
ஒரு கொடியாய்
படர்ந்த உறவுகள்
கூடிக் குலாவி
குதூகலித்த சுவடுகள்
கூடொன்றாய்
கிடந்த வீடொன்று ....


இரட்டை சிறகுலர்த்தி
காத்து வளர்த்தெடுக்க
மாந்தோப்புக் கிளிகளாக
மஞ்சத்தில் கிளைத்திருக்க
மாமன் வேட்டியில்
தூளிகள் மலர்ந்திருக்க
இலைத் துண்டில் குழை
உருண்டை மகிழ்ந்துண்ண
எத்தனை சொர்க்கமாய்
கிடந்த தோப்பு....
தறிக்கப்பட்டு தரையில் கிடந்து நசியும்
கிளைத் துண்டங்கள் போல
திக்கொன்றாய்
திசைக்கொன்றாய். .....


அகவைகள் தொலைந்த
பெற்றவர்கள் பாரமென
பல இல்லங்கள் பாரமெடுக்க
இடை வந்த எதோ
உட்கார்ந்து உயிரெடுக்க
சக உதரப் பிறவிகள்
சங்கடத்தில் சரிந்திருக்க
பாசப் பிணைப்புக்களை
பணம் தத்தெடுக்க
கசந்து போன
காலச் சுவடுகளாய் தொலைந்து
மீண்டும் ஒரு முறை
மறு பிறப்பெடுத்து
ஒரு கூட்டுப் பறவைகளாய்
வாழ வேண்டும் நிலைத்து !

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (8-Jan-16, 4:43 pm)
பார்வை : 84

மேலே