மழையின் சினம்

மழையே மண்ணின் உயர்த்துளியே
பிழைஏன் செய்தாய் நீபெய்தே
ஆருயிர் காத்திடும் நீஇங்கே
அழித்திடத் துணிந்தது சரியாசொல்

மெதுவாய் நீயும் பெய்திருந்தால்
மகிழ்ந்திருக்கும் மண்ணின் உயிரெல்லாம்
கோபத்துடன் இங்கு நீவந்தே
கொடுத்தாய் துயரம் மக்களுக்கே

மண்ணில் உயிர்களின் நிலையைநீ
எண்ணா திப்படி ஏன்பெய்தாய்
உன்னால் வாழ்ந்திடும் மக்களையே
உருட்டிப் பகையைத் தீர்த்துக்கொண்டாய்

நீவந்து தங்கிடும் நிலங்களியே
நாங்கள் வீடுகள் கட்டிவைத்தோம்
புரிந்தோம் அறிந்தோம் உன்சினத்தை
புரியோம் இனியே வீண்செயலே

வீதியில் நீயும் ஓடுகையில்
வாண்டுகள் கல்பலை ஓடவைக்கும்
வீட்டுக்குள் இப்படி நீபுகுந்தே
வேதனைகள் மிக ஏன்தந்தாய்

உண்ணும் உணவும் உறைவிடமும்
உடைகளைக் கூடஅடித்துச் சென்றாய்
அடிப்படைத் தேவைக்கு அடுத்தவரை
அண்டியேக் கையேந்தும் நிலைதந்தாய்

பசியினை அறியா மனிதரையும்
பட்டினிக் கிடக்க வைத்தாயே
பார்த்துப் பார்த்து வளர்த்துவந்த
பசுவையும் கன்றையும் கொன்றாயே

கொஞ்சிப் பேசிடும் மழலைகளும்
குமுறியழும் காட்சிக் கண்டபின்னும்
குறையலையோ உன் கடுங்கோபம்
கொள்ளாதே இனிஎங்கள் கடும்சாபம்

உன்னால் வளர்ந்த எங்களையே
கன்னலேன கசக்கிப் பிழியாதே
கண்களை விழித்து பூமியைப்பார்
கனிவுடன் உன்நிலை மாற்றப்பார்.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (8-Jan-16, 6:09 pm)
பார்வை : 64

மேலே