தற்கொலை

புழுதிப் படிந்த கால்களை
தெப்பக்குளத்தின்
முதல் படி நீரில் நனைக்கும்
வீதிச் சிறுவர்களும்
"அழகியக் கண்ணே"வை
ஆறாவது முறையாகக் கேட்கும்
என்னைப் போல் ஒருவனும்
மாரியம்மன் கழுத்தில் கிடந்த‌
சாமந்தி மாலையிலிருந்த‌
உதிர்ந்த இதழ்களும்
கடக்கும் வரைக் காத்திருந்து
எப்போதும்
உப்புச்சோப்பில் குளிக்கும்
கருப்பசாமித் தாத்தா
சோப்பில்லாமல்
தற்கொலைக்காக‌
தலை முழுகும் முன்

மறுகரையில்
புட்டிப்பாலில் வளர்ந்த
தமிழ்க்குட்டி
மீன்களுக்குப் பொரித் தூவிச்
சிரிக்கும் அழகை
ரசிக்க ஆரம்பிக்கிறார்....!

______________________________
முகநூலில் கு.விநாயக மூர்த்தி

எழுதியவர் : மீள் (10-Jan-16, 10:21 am)
Tanglish : tharkolai
பார்வை : 115

மேலே