ரீங்காரம்
முன்பொருமுறை
முதன்முதலாய்
முயல் பார்த்த
பனங்காட்டு ஓர
ஒற்றைப் புளியமரத்தில்
அமாவாசை
முந்தைய மாலையில்
தேன் சொட்டச் சொட்ட
தேன் கூடு எடுத்து
நடந்து செல்கையில்
பின்னாலேயேத் துயரமாய்
ரீங்காரமிட்டுச்
சுற்றி வந்த
தேனீக் கூட்டத்தை
வெங்காயம் மென்று ஊதியபடித்
துரத்தி
வீடு சேரும் வரை
அந்த ரீங்காரச் சத்தம்
என்னை எதுவும் செய்யவில்லை.
இப்படியொரு தனிமையில்
இப்படியொரு துயரத்தில்
இப்படியொரு வாதையில்
புரண்டுப் புரண்டுப் படுக்க
போர்வைக்குள்ளாய் வந்து
என்னைக் கொல்லும்
அந்த ரீங்காரத்திலிருந்து
எப்படித் தப்பிப்பது...?
_______________________________________
படைப்பு.: முகநூலில் கு.விநாயக மூர்த்தி