வங்கிப்போர்வையில் ஒரு கந்துவட்டிக்கடை
வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டதன் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் வங்கியின் செயல்பாடுகள் வேளாண்மையை மையமாகக்கொண்டிருந்தன. இப்போதோ, வாராக்கடன்களை எப்படியெல்லாம் ஈடுசெய்யலாம்; அதற்கு எப்படியெல்லாம் ‘லேபிள்’ ஒட்டலாம் என்று சிந்திக்கத்தொடங்கிவிட்டன. மக்களுக்கு, அதுவும் கிராமப்புற மக்களுக்குசேவை என்கிற நிலையில் இருந்து சென்செக்ஸ் மூலம் பண வரவு-செலவு என்கிற நோக்கத்தை நோக்கி வங்கிகள் நடைபோடத்தொடங்கிவிட்டன.
இந்தியா ஒரு விவசாயநாடு என்பது பால பாடம். 83 சதவீத மக்கள் இன்னும் கிராமங்களில்தான் வசிக்கிறார்கள். ஒரே நாளில் நாடுமுழுவதும் 154 கிளைகளைத் திறந்திருக்கிறோம் என்று மார்தட்டிக்கொள்ளும் பாரத ஸ்டேட் வங்கியின் அண்மைக்கால செயல்பாடு கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். உலக மயமாக்கலுக்குப்பிறகு ஏற்பட்ட தொழில்வளர்ச்சியால் வங்கிகளில் சேவைச்சூழல் மறைந்துபோய், வியாபாரச்சூழல் தோன்றிவிட்டது. வியாபாரத்தில் வாராக்கடன் இயல்புதானே? வாராக்கடனை ஈடுசெய்ய என்னென்ன வழிகள் உண்டோ அவற்றையெல்லாம் வங்கியாளர்கள் செய்யத் தொடங்கிவிட்டனர். ஏழை எளிய மக்கள் தங்களுடைய அவசரத் தேவைகளுக்காக எளிதில் பெற்றுவந்த நகைக்கடன் வசதி ஏறத்தாழ பாரத ஸ்டேட் வங்கியில் இப்போது மறுக்கப்பட்டுவிட்டதாகவே கொள்ளலாம். வட்டிக்கொள்ளைக்காரர்களாகிய தனியாரிடமிருந்து தப்பித்து நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிக்குள் வந்தால் ‘இவருக்கு அவரே தேவலை’ என்கிற நிலை.
பாரத ஸ்டேட் வங்கியில் செயல்பாட்டுக்கட்டணம் (processing charge) என்கிற பெயரில் இப்போது குறைந்த பட்சம் 1,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுவரை நகை மதிப்பீடு செய்வதற்காகவோ, செயல்பாட்டுக்கட்டணமாகவோ வெறும் அரை சதவீதத்தை மட்டுமே வசூலித்து வந்த பாரத ஸ்டேட் வங்கி இப்போது செயல்பாட்டுக்கட்டணம் என்கிற போர்வையில் 1,000 ரூபாயை வசூலிக்கத்தொடங்கி சாமானிய மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது; அதுவும் தலைகுனிந்து நிற்கிறது.
5,000 ரூபாய் நகைக்கடன் பெறுவதற்காக நீங்கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்றால் 1,000 ரூபாயான செயல்பாட்டுக்கட்டணத்தைக் கழித்துக்கொண்டு வெறும் 4,000 ரூபாய் உங்களுக்குக் கிடைக்கும். இந்தக்கடனுக்கு 12.5 சதவீத ஆண்டுவட்டி வசூலிக்கப்படுகிறது. ஓராண்டு முடிவில் வட்டி கணக்கிடும்போது நீங்கள் 4,000 ரூபாயை கையில் வாங்கியிருந்தாலும், 5,000 ரூபாய் அசலுக்குத்தான் வட்டி கணக்கிடப்படும். நகையை மீட்கும்போது நீங்கள் 5,630 ரூபாய் செலுத்த வேண்டும். அதாவது நாலாயிரம் ரூபாய்க்கு ஓராண்டுக்கு 1,630 ரூபாய் வட்டி. கிட்டத்தட்ட 41 சதவீத வட்டி இந்த சாமானியன் தலையில் விழுகிறது. செயல்பாட்டுக்கட்டணமாக உங்களிடமிருந்து ‘பிடுங்கிக்கொண்ட’ 1,000 ரூபாயை ‘முன்வட்டி’ என்று பெயர்மாற்றிக்கொண்டால் வட்டி விகிதம் இன்னும் உயரும்; ‘பாரத ஸ்டேட் வங்கி’ என்கிற பெயரும் ‘கந்துவட்டிக்கடை’ என்று பெயர்மாறிப்போகும்.
அய்யா, சீமான்களே! இந்தியா ஒரு விவசாய நாடு. 83 சதவீத மக்கள் இன்னும் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். அவர்களை நகரத்தை நோக்கி விரட்டியடிக்க நீங்கள் என்னென்னவோ முயற்சிகள் செய்து வந்தாலும் விடாப்பிடியாக இன்னும் தாங்கள் பிறந்த மண்ணையே கிண்டிக்கிளறிக்கொண்டு நமக்கெல்லாம், சோறும், பாலும், முட்டையும், காய்கறியும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கிராமவாசிகள். அவர்களின் வயிற்றில் இப்படி அடிக்கவேண்டியதில்லை இந்த வங்கித்துறை நிபுணர்கள்! படித்தவன் பாவம் செய்யக்கூடாது. இது பாரதியின் பாடம். வங்கி நிர்வாகத்தில் சேவைக்கட்டணம், செயல்பாட்டுக்கட்டணம் என்றெல்லாம் பெயர்மாற்றி வசூலிக்கப்படுவது சாமானியமக்களை ஏமாற்றத்தான்.
1994ல் அப்போதைய நிதிஅமைச்சரால் சேவை வரி கண்டுபிடிக்கப்பட்டது. ஏதோ மூன்று இனங்களின்மீது வெறும் 5 சதவீதமாக இருந்ததால் யாரும் கண்டுகொள்ளவில்லை. சேவை வரி இப்போது 100 இனங்களின்மீது 10.2 சதவீதமாக நிலைகொண்டுள்ளது. இந்த சேவை வரி இன்னும் பல இனங்களில் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. வரிவருவாய் பெருகினால்தானே இலவசங்களை வாரி இறைக்கலாம். ஓட்டு வங்கியை வசப்படுத்தலாம். இலவசக்கல்வி கட்டணக் கல்வியாக மாறிப்போனபோது ஆரம்பத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்புறம் கட்டணக்கொள்ளையாக உருவெடுத்தபோதுதான் ‘குய்யோ, முறையோ’ என்று கூவத்தொடங்கியிருக்கிறோம். ஆரம்பத்தில் இலவசமாகத்தான் மூத்திரம் பெய்துகொண்டிருந்தோம். அப்புறம் மூத்திரம் பெய்ய காசு கொடுக்க வேண்டியிருந்தது. மூத்திரப்புரைகளில் சேவைவரி வாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. ‘கையில் பிடித்துக்கொண்டு’ கூக்குரலிடும் காலமும் வெகுதொலைவில் இல்லை. சேவை வரி இப்படியெல்லாம் உருமாறிப்போகாது என்பதற்கு இந்த நாட்டில் எந்த உத்தரவாதமும் இல்லை. சேவை வரிக்கு எதிராக நாமெல்லாம் குரலெழுப்பவேண்டிய காலம் வந்துவிட்டது.
வங்கிகள் இருப்பது மக்களை நம்பித்தான். அவற்றின் செயல்பாடும் மக்களுக்காகத்தான். இந்நிலையில் வங்கிகளின் அன்றாட பணிகளுக்கு “சேவை” என்றும் “செயல்பாடு” என்றும் லேபிள் ஒட்டிக்கொள்வது அநியாயம். சேவையையும் செயல்பாட்டையும் வங்கியின் அன்றாட வேலையில் இருந்து நீக்கிவிட்டுப்பாருங்கள்! வங்கி ஊழியர்கள் காப்பி குடிப்பதும், குளிர்காற்று வாங்குவதும் மட்டும்தான் மிஞ்சும்.
- மு.குருமூர்த்தி From கீற்று டாட் காம்