ஊனமும் ஏணியாகும்

ஊனமும் ஏணியாகும்

பாவலர் கருமலைத்தமிழாழன்

குழந்தையினைப் பெற்றெடுத்தத் தாயோ தன்னின்
-----குழந்தையினைக் காட்டென்றாள் மகிழ்ச்சி பொங்க
குழந்தைபேறு பார்த்திட்ட மருத்து வர்தாம்
-----குழந்தையினைக் காட்டுதற்குத் தயக்கத் தோடே
அழவேண்டாம் ஆயிரத்தில் ஒருவ ருக்கே
-----அருங்குழந்தை இதுபோன்றே பிறக்கு மென்றே
இழப்புதனைத் தாங்குதற்கே திடமாய் நெஞ்சை
-----இரும்பாக்கிக் கொள்ளென்றார் தாயி டத்தே !

துடித்திட்ட தாயவளோ பெற்ற பிள்ளை
-----துடிப்பின்றிப் பிறந்ததுவோ என்று கேட்க
வடித்திட்ட சிலைபோன்றே அழகு கொஞ்ச
-----வந்துயிரில் பெண்குழந்தை பிறந்த தென்றும்
அடித்திட்டால் சொல்வதற்கு வாயு மின்றி
-----அடித்தவரைக் காண்பதற்குக் கண்ணு மின்றிப்
பிடிப்பின்றி ஊமையாய்க் குருடாய்ப் பிள்ளை
-----பிறந்துளது எனச்சொன்னார் வருத்தத் தோடே !

பெண்குழந்தை எனத்தாழ்வாய் விட்டி டாமல்
----பெரும்முயற்சி எடுத்தவளை வளர்த்தார் தாயும்
கண்தெரியாக் குறைதெரியா வண்ணம் நல்ல
-----கல்விதந்து நம்பிக்கை தந்தார் நாளும்
எண்ணத்தில் திண்மையுடன் எழுதிப் பேசி
-----எல்லோரும் வியந்திடவே எலன்கெல் லர்தாம்
மண்மீதில் சாதனையைப் படைத்து நின்றார்
-----மனமிருந்தால் ஊனமுமே ஏணி யாகும் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Jan-16, 7:41 pm)
பார்வை : 406

சிறந்த கவிதைகள்

மேலே