குற்றம்

யாரும் செய்யாதக் குற்றமொன்றை
அவன் செய்திருந்தான்.

இதற்கு முன் யாரும்
செய்திருக்க முடியாது என்று
தெரிந்தே அதை செய்திருக்கவில்லை.

எவரும் அதை செய்வதற்கு முன்பே
செய்துவிடவேண்டும் என்றும்
செய்யவில்லை.

இது குற்றமா என்று தெரியாமலேயே
செய்திருக்கவும் கூடும்.

செய்தகுற்றங்களுக்கான
தண்டனைகளிலிருந்து தப்பித்தக்
குற்றவாளியைப்போல் குற்றவுணர்வுற்றுக்
குறுகுறுக்காத அவன்
செய்யாத குற்றத்திற்குத்
தண்டனையை அனுபவிக்கும் கைதியைப் போலும்
இல்லாமல் இருந்தான் .

குற்றமென்றால் என்ன
குற்றமே செய்யாத ஒருவரால்
குற்றமென்று ஒன்றை செய்ததாகக்
கருதப்படுவதா இல்லை
குற்றங்களுக்கெல்லாம் குற்றமான
குற்றத்தைச் செய்தவன்
குற்றமே இல்லாதவன்போல் ஒருவனைக்
குற்றம் சாட்டுவதா என்றக்
குழப்பத்தில் இருந்தான் அவன்.

குற்றமற்ற ஒன்று உள்ளதென்பதை
அடையாளப் படுத்தவேண்டுமாயின்
அது எப்படி இருக்கவேண்டும் என்பதற்காகவேனும்
குற்றங்கள் இருக்கவேண்டுமல்லவா?

நிலவின் ஒளி எப்படிப்பட்டதென்று
அறிந்துகொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட
இருளின் அவசியத்தைபோல்
குற்றமிமையின் பூரணத்துவம் பற்றி
பரிசுத்தமானவர்கள் அறிந்து தெளிவதற்கு
குற்றம் அவசியமானதொன்று என்பதாகும்போது
அது எப்படி குற்றமாகுமென்று
அவன் மிகவும் குழப்பத்தில் இருந்தான்.

இருளால் நிலவு அழகாகும்போது
இருள் எப்படிக் குற்றமாகும்?

இருளே குற்றமென்றால்
குற்றத்தை இரசிப்பதர்ககவா
வானத்தில் நிலவு உலாவருகிறது?

அறியாத பிள்ளைகளுக்கு
அறிவிக்கப்படுவதான அறிவை
அறிமுகப்படுத்த
கருத்தப் பலகையில்
வெள்ளை எழுத்துக்களைக்
காட்டும் ஆசான்கள்
எழுத்துக்களை
எழுதிக்கொள்ளச் சொல்கின்ற
ஞான போதனையில்
எழுத்துக்களை எழுத்துக்களாய்க்
காட்டிய கரும்பலகையைப் பற்றிச்
சொல்லாமல் விட்டது
போதனையின் குற்றம்.

குற்றங்களைத் குற்றமென்று தீர்மானிக்கும்
குற்றவாளிகளின் குற்றம்
குற்றுயிரும் கொலையுயிருமாய்க் கிடக்க
அடையாளப்படுத்தப் படாத ஒன்றை
தாங்கிக் கொண்டு கூண்டுக்குள் நுழைவதா
சிறகுகளை விரிப்பதா என்னும்
புலனாய்வில் மதில் மேல் பூனையாய்
காத்திருக்கும் அவனது
சுதந்திரமும் சிறையும் அவனே
தீர்மானித்துக் கொள்வதற்காக காத்துக்கிடக்க
இனி நாம் மெல்ல ஒதுங்கிக் கொள்வோம்
குற்றங்களின் எண்ணிக்கையில்
நம்மில் ஒன்று கூடாமலிருக்க.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Jan-16, 2:40 am)
Tanglish : kutram
பார்வை : 161

மேலே