மனிதத் தீவுகள்

நகரத்து மனிதர்கள்
நகரும் தீவுகள் !
அவசர யுகத்தின்
வளர்ப்புப் பிள்ளைகள் !

கண்ணுக்குத் தெரியாத
திரையிட்டுக் கொண்டு
கண்டு கொள்ளாமல்
கடந்து போகிறார்கள் !

அருகிலிருப்பவர்கள்
பார்வைக்குத் தெரிகிறார்கள் -
மனதுக்குத் தெரிவதில்லை !
முகம் பார்த்து
ஒரு புன்னகை சிந்த
மனம் வருவதில்லை !
உயிருள்ள சிலைகளாய்
உலவுகிறார்கள் !

எதிரெதிராய் சந்திக்கும்போதும்
ஓர் இனம்புரியாத
வார்த்தைப் பஞ்சம்
வந்துவிடுகிறது !

மனிதர்கள்
எலும்பும் சதையும் கொண்ட
என்திரன்களாய்
மாறிப்போன
மர்மம் என்ன ?

வாழ்க்கை வசதிகள்
மனிதர்களிடையே
மனிதத்தைப் பிடுங்கி
இடைவெளிகளை
நட்டு வைத்துள்ளன !

இங்கு
சாலைகளில்
படகு விடும்போதுதான்
ஒரு ரொட்டித் துண்டைக் கூட
பகிர்ந்துகொள்ளும்
எண்ணம் வருகிறது !

மரணத்தைத் தொட்டு
மீளும்போதுதான்
மனிதத் தீவுகள்
கைகுலுக்கிக் கொள்கின்றன !

வெள்ளம்
ஆபத்தை மட்டுமல்ல -
அன்பையும்
கொண்டு வந்திருக்கிறது !

இனியேனும்
உள்ளத்தின் ஈரம்
உலராதிருக்கட்டும் !
மனித நேயம்
மலர்ந்து சிரிக்கட்டும் !

எழுதியவர் : mathibalan (15-Jan-16, 1:15 am)
பார்வை : 170

மேலே