“பொங்கலோ பொங்கல்…”
பாரினில் பஞ்சம்
பகலவனே பணிகிறேன்
பரிந்திடு கொஞ்சம்...
பார் உலகு பொலிவில்லை
ஏர் உழவு செழிப்பில்லை
கார் முகிலன் கனிவில்லை
மார்த்தட்ட மனமில்லை
போர்க் களமே பரவாயில்லை
“அறுவடை செய்தேன்
ஆண்டவா உண்”
அன்பின் படையல்- அளித்தோன்
அவனியின் தலைவன்
அறுசுவை உணவில்
ஐஞ்சுவை கண்டாயோ..?
ஆறாம் சுவை அடைய
அரசியல் தந்தாயோ..?
உலையேறிய கலமாகட்டும்
உழவன் நெஞ்சம்...
உயர்ந்து வழியட்டும்
உவகைப்பால் கொஞ்சம்...
கருகும் விறகாகட்டும்
கயவர் வஞ்சம்...
சருகும் வித்தாகட்டும்
சாம்பலும் சத்தாகட்டும்...
அருகி வரும் ஆனந்தம்
அருகில் வருமெனும் பேரவாவில்
அடியேன் ஆராவாரிக்கிறேன்
“பொங்கலோ பொங்கல்…!”