முதல்மொழி தமிழ்மொழி
முதுமொழி முதல்மொழி நமதன்னை தமிழ்மொழி
இதுவரை இதற்கொரு இணையில்லா இசைமொழி
இலக்கண வளம்கொண்டு இலக்கியம் பலதந்து
நலம்மிகு வாழ்வினை நல்கிடும் நன்மொழி
ஒளிதந்து கருத்தினில் உலவிடும் உயர்மொழி
எளிமையை எல்லோர்க்கும் இயம்பிடும் இயல்மொழி
பார்முழுதும் போற்றி்டும் பண்பினை உலகிற்கே
பறைசாற்றி முழங்கிடும் முத்தமிழ் முறைமொழி
எத்தனை மதம்சாதி இந்நாட்டில் இருந்தாலும்
அத்தனை இனத்தையும் அணைத்திடும் அருள்மொழி
சமயத்தைப் பரப்பிட அயலவர் வந்தாலும்
தமதாக்கி அவரையும் மாற்றிடும் மணிமொழி
வெவ்வேறு மதமிங்கு விரும்பியே புகுந்தாலும்
ஒவ்வொரு மதத்தையும் தமதாக்கும் திருமொழி
கற்றவர் கல்லாதார் எவராக இருந்தாலும்
உற்றவர் போல்நின்று அறம்கூறும் அணிமொழி
அகமென்றும் புறமென்றும் இருவகை வாழ்வினை
அகிலமே உணர்ந்திட உரைத்திட்ட ஒருமொழி
ஆண்டவன் அருளையும் அழகன்திரு வருளையும்
வேண்டிய வரையிலும் கொண்டுள்ள வளர்மொழி
அறிவியல் ஆய்வோடும் ஆன்மிக நெறியோடும்
செறிவான நீதியினை செப்பிடும் சீர்மொழி
தென்னையிள நீர்சுவையும் கன்னலின் தனிசுவையும்
என்றைக்கும் குறையாமல் வழங்கிடும் வளமொழி
எழுத்தாலும் கருத்தாலும் இதயத்தின் களைகளை
ஏர்கொண்டு உழுதிங்கு ஏற்றம்தரும் துணைமொழி
எல்லோர்க்கும் எப்போதும் ஏற்றவழி போதித்தே
வல்லமையும் வளத்தினையும் வாரிதரும் வண்மொழி
அறுசுவைகள் இருந்தாலும் அத்தனையும் தாண்டியே
நறுஞ்சுவை நல்கிடும் நயனுறு நலமொழி
அறிவியல் வளர்ச்சிகள் ஆயிரம் இருந்தாலும்
அதனோடு தானிணைந்து வென்றிடும் தமிழ்மொழி.
எழுதியவர்
பாவலர் . பாஸ்கரன்