இயற்கை

அனைத்துயிரும் வாழ்வதற்கு ஆண்டவனின் சித்தம்
நினைத்தபடி உண்டான வையம் – வினைப்படியே
பஞ்சபூதத் துள்ளகப் பட்டெமக்கு காட்டுகின்ற
வஞ்சமற்ற கண்காட்சி காண்.

காற்றலையில் மாசு கலக்கின்ற விஞ்ஞானம்
தோற்றுவிக்கும் கேடால் இயற்கையின் – நாற்றுகள்
ஈற்றில் அழிந்து எமக்குண்ண ஏதுமற்று
மாற்றம் பெறுதல் தடு.

தானாய் விளைந்து தகுந்தபடி எம்நாவில்
தேனாய் இனித்ததெலாம் தீய்ந்தழிய – லானால்
உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம்
கலக்கத்தில் வீழும் கரிந்து.

இறைவன் அளித்த இயற்கை கொடையால்
நிறைகுட மானோம் நிலைத்து – உறைந்த
பனிப்பாறைக் கட்டி உருகி வழியின்
இனிநாமும் நீருக் கிரை.

அழியா வனத்து அடர்த்தி குறையா
வழிகள் சமைத்து விடுவோம் – வழியில்
மரம்நாட்டி வைத்து விழியாய் அதையும்
உரமிட்டுக் காப்போம் உணர்ந்து.

நாளைய நம்குழந்தை நற்காற்றை உட்கொள்ள
வேளைகள் தோரும் விருப்போடு – ஆளுக்காள்
இச்சையுடன் காக்கும் எழில்வனத்தால் மண்மேலே
அச்சமின்றி வாழச்செய் வாய்.

கண்ணில் பசுமை விதைக்கின்ற காட்சிக்கு
மண்ணில் வளர்கின்ற தாவரங்கள். – பெண்ணில்
கருவாகும் சந்ததி வாழ்வதற்கு சேர்த்தே
உருவாக் குமியற்கை ஊண்.

வாழும் உயிரெல்லாம் வாழ்ந்து முடித்திங்கு
வீழும் மரணத்தின் வெற்றிக்கு – சூழும்
துயர்வளர்க்க துண்டாடும் மண்ணில் இயற்கை
உயர்வாக்க எல்லாம் நலம்.

இயற்கை யளித்து இடர்கொள்ளும் தீங்கால்
புயற்கை விரிந்து சரிக்கும் – மயக்கும்
இயற்கை மயங்க இகம்வாழும் நீயும்
தயங்காமல் காத்து விடு.

எதுவுமற்று வந்த எமக்கிங்கு எல்லாம்
பொதுவென்று தந்த இயற்கை – அதுதான்
நதியிழந்து நல்ல பயிரிழந்து இன்று
சுதியிழந்து நிற்கிறதே பார்.

நாமழிந்து போனாலும் நாழும் அழியாமல்
சேமமுடன் மீண்டெழுந்து கொள்ளுகின்ற – மாமலரே
நாமுமக்குப் பட்டகடன் தீர்ப்பதற்கெய் தும்இயற்கை
தாமுன்னில் சேரும் வழி.

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Jan-16, 1:59 am)
Tanglish : iyarkai
பார்வை : 702

மேலே