நீருபூத்த நினைவுகள்- குமரேசன் கிருஷ்ணன்
நீ பூத்திருந்த ஓர்நாளில்தான்
இலவம்பஞ்சு
இலவுகாத்தக்கிளி கதை
புரியத்துவங்கியதெனக்கு...
கண்ணாமூச்சி விளையாட்டில்
ஒன்றாக நாம்
ஒளிந்திருந்த பொழுதுகளும்
நொண்டி விளையாட்டில்
நம் பாதச்சுவடுகளும்
நட்பை உரைக்க
மிச்சமிருக்கின்றன இன்னும்...
கிணற்றினில்
ஒன்றாகக் குளித்த பொழுதுகளும்
ஓரே குச்சிஐசை
இருவரும் சுவைத்த நொடிகளும்
நினைவுகளுக்குள்
ஊஞ்சலாடுகிறது நித்தம்...
எனக்கு மீசையும்
உனக்குத் தாவணியும்
முளைத்தபின்
பருவம் நம்மைப் பிரித்தது...
சமூகத்தின் சாளரங்கள்
சந்தடிச் சாக்கில்
எதையாவது உளரித்தொலைக்க
நம் சந்திப்புகள்
நட்போடு விடைப்பெற்றன...
நீ உன் கணவனோடும்
நான் என் மனைவியோடும்
நட்போடு காதலையும்
பரிமாறிக்கொண்டாலும்...
இதயத்தின் ஏதோவொரு மூலையில்
இளமைக்கால நட்பு
இன்னும் நீருபூத்துக்கிடப்பதை
உணர்வாயா நீ...?
ஆண்... பெண்
நட்பெனப்படுவது யாதெனில்
உள்ளத்துள்ளே
உரைந்துபோகக் கடவ...
எனச் சாபமிட்ட
சமூகத்தின் முகத்திரை கிழிக்க
எழுந்துவா என்தோழி...
இன்னும் தொலைந்துபோகாத
நம் ஊர்த்திருவிழாவில்
நீ என் அருகில் இருந்தும்
நலம் விசாரிக்க வெளிப்பட்ட
உன் கண்ணோடு போட்டியிடும்
கண்ணீர்த்துளிகளை
சட்டெனத் துடைத்துவிடு
உன் கணவனால்கூட
உணர்ந்து கொள்ளமுடியாது
நம் நட்பின் துளிகளை...!
-----------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்