21-01-16-------- ------ தவிப்புகள் -----

21-01-16-------- ------ தவிப்புகள் -----

கலிவிருத்தம்:

காணா தனக்காண காற்றில் உயிர்விட்டுப்
பேணா தனப்பேணிப் பேசா தனப்பேசி
மாணா னவற்றை மனத்துள் நிறுத்தாமல்
கோணா ன,வாழ்க்கை கொண்டே மடிவேனோ?
---- --
வஞ்சி விருத்தம்:

கரை,நான் நின்று பரிதவிப்பேன்!
நுரை,நீ தள்ளிப் பரிகசிப்பாய்!
விரைந்தே வரும்மதி ஒளிகுன்றி
மறைந்தே முகிலின் பின்செல்லும்!

உந்தன் அழகைப் பருகிடவே
உந்தும் நினைப்பில் உருகிடுவேன்!
சந்தம் கொடுக்கக் குயிலில்லை!
சார்ந்து பாட நீயில்லை!
----

வாசலில் வைத்த புள்ளி
வாழ்க்கைக்கே வைத்தே னாமோ?
நேசனே என்னைத் தள்ளி
நீவைத்துப் போன தேனோ?
-----
வஞ்சித்துறை:

மஞ்சள் நதிகண்டு
மனமிழந்து குதித்தவன்தான்!
செஞ்சாந் ததுவென்று
சிறுபொழுதில் அறிந்தவனே!

கொஞ்சம் காயம்தான்
கூட்டுகின்ற வலியும்தான்
குஞ்சி நனைத்தன்றிக்
குளிர்முத்தும் கண்டெடுப்பேன்!

குறள் வெண்செந்துறை:

அஞ்சி இறக்கேன்,மீன்
ஆகி மிதக்கேன்,நான்!
----- ---
தரவு கொச்சகக் கலிப்பா:

சிறுத்தமுலை பருத்தயிடைச் சிக்கலிலே தினம்,மாட்டிப்
பொறுத்த,மன வருத்தமதை, பொய்ச்சுகத்தை அறியாமல்
கருத்தகுழல் திரித்தவராய்க் கழுத்தேற்றி மடிகின்றோம்!
திருத்தவரும் திரித்துவத்தை தினமவர்க்குப் படியேமோ?
--- --
“எண்ணிக்கையே தர்மமாகிய
குருஷேத்திரத்தில்
வெற்றிகளெல்லாம்
கௌரவர்களுக்கே
சேருகின்றன “............................
என்றார் பித்தன்!
அப்படியென்றால் அது
மக்களுக்கு ஏன் சேரவில்லை ?
அவர்களெல்லோரும்
எண்ணிக்கையற்ற
சூனியங்களா?
அவ்வாறெனில் அவர்களைக்
கௌரவப்படுத்த அந்த
புருஷோத்தமன்
எப்பொழுது வருவான்?
---- --

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (21-Jan-16, 8:20 pm)
பார்வை : 62

மேலே