கார்கால காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆழியிடை நீராடி
அவனி மீதில்
தினம் ஓடி
புவி தழைக்க
திரிந்திடும் மேகமாய்
என் காதல்!
காமன் கணைகளை
எறிவதும்...
கடவுள் அருளைப்
பொழிவதும்...
காதலெனும்
மேகவழிதான் கண்ணே..!
காண்!! பொட்டல்காட்டில்
பூமலர்ந்து
புல்லினங்கள் மேவிட...
உழவனின் வியர்வை
தினம் பருகி
வேர் நனைத்து
பயிர் விளைக்கும்
காதலின் உச்சம்
மேகமடி!!...
என் ஆசையெல்லாம்
உன் தலை
நனைத்து கிரீடமாவதல்ல...
உன் பாதம்
நனைத்தேனும்
முக்தி பெறுவது!...
கள்ளிக்குள் அகலாய்
புதருக்குள் பூவாய்
அரளியில் மணமாய்
உன் மனம் சேரட்டும்
என் சாரல்!...
பூமிக்கும்
வானுக்குமான பூர்வீக
உறவில்
முத்திசை
வாழ்ந்திடினும்
ஒரு திசை
அழிவுண்டு...!
இள மனது
ஊற்றெடுத்த
காதல் தூறும்
திசைதோறும்
ஆக்கமன்றி அழிவில்லை!!
ஒரு சொல்
வேறுபட்டு
கோடி பொருள்
ஒன்றுபடும் மேகமும்-
மோகமும் ஓரினம்...!
மணம் வீசி
எழுந்து நிற்கும்
கார்த்திகை மலராகவோ...
பாதம்பட தவம்
கிடக்கும்
பசுமை வேய்ந்த
புல்லாகவோ
வாழ்ந்திடுவேன்
உன் வாசலதில்...
கசிந்துருகும்
என் காதல்
வசீகர கடுமையை
உணராயோ நீ!...
வாசல் தாழிட்ட
கதவோடிணைத்து
சன்னல்களையும்கூட
சற்றே சாற்றிடினும்
வீதி நனைக்கும்
சாரல் துளி பட்டேனும்
உனக்குள்ளும் மலரும்
கார்கால காதல்!!...
********************