மந்திரத்தின் பலன்
முன்னோரு காலத்தில் வேதம் கற்றுத் தரும் குரு ஒருவர் இருந்தார். அவர் பல பிள்ளைகளுக்கு வேதம் கற்பித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஒரு சிறுவன் தனக்கும் வேதம் கற்பிக்க வேண்டும் என அவர் அடி பணிந்து நின்றான். அவரும் அவனிடம் தயையுடன் ஒரு சின்ன வேத வாக்கியத்தைச் சொல்லி இதைச் சரியாகச் சொல் என்றார்.
ஆனால் அவன் அதைப் பல முறை முயன்றும் அடி மாறாமல் சொல்ல முடியவில்லை. எனவே அந்த குரு உனக்கு வேதம் வராது. வீண் ஆசை வேண்டாம். இங்கிருந்து போய்விடு என்று கூறிவிட்டார். அவனும் மிக்க கவலையுடன் சென்றுவிட்டான்.
மறுபடியும் பத்து நாட்கள் கழித்து அச்சிறுவன் அவரிடம் வந்து இவ்வாறு கூறினான், சுவாமி அடியேன் பல கோவில்களுக்கு சென்றேன். அங்கெல்லாம் சிறந்த வேதவிற்பன்னர்கள் நன்கு வேத பாராயணம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். காது குளிரக் கேட்டேன். அதுபோல் அடியேனுக்கும் வேதம் கற்றுக் கொண்டு அவ்வாறு பாராயணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது.
தங்களை காட்டிலும் சிறந்த குரு உண்டோ எனவே அடியேனிடம் அன்பு கொண்டு எப்படியாவது வேதத்தைக் கற்பித்தருள வேண்டும் என மிக்கப் பணிவன்புடன் கேட்டுக் கொண்டான். இதைக் கேட்ட அவர் முன்பு சொன்னதைக் காட்டிலும் மிகவும் கடினமான வேதபாகத்தைக் கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிடம் உச்சரித்து கண்ணைத் திறந்து பார்த்தார். அந்த சிறுவன் எதிரில் காணவே இல்லை. ஓடிப் போய்விட்டான்.