அற்புத இயற்கையின் இருக்கை

சிரித்துக் கலகலக்க
விண்மீன்கள்
வெண்முத்துப்
பற்கள் பளபளக்க
அழகாய்
அசைகிறது மகராசி
குளிர்மையில்
குளிப்பாட்டி நிலவு !

எல்லையற்ற
வான்திரை
மூடிப்போர்க்க
தூங்கிக்கிடந்து
எழும்பி
இருக்கிறது பூமி !

பூமிக்கு
கருங்கொண்டையில்
ஒற்றையாய்
சாமந்தியால் பூச்சூடி
மகிழ்ச்சியில்
திளைக்கிறது கதிரவன் !

கதகதப்பும்
காய்த்தலும்
பிரகாச உச்சமும்
பிறப்பெடுக்க முன்னரே
கிடைத்த
புதையல் அதற்கு !

அதனோடு உரசி உரசி
உச்சி முகர்ந்து
சிலுசிலுப்பில் தவழ்ந்து
உஷ்ணம்
குறைக்கிறது நீலக்கடல் !

பொன்னந்தி
வானத்தை உடுத்தி
புகுந்த வீடு போகிறது
செங்கதிர் !

தொடுவானமும்
நீலக்கடலும்
சல்லாபித்துக்கொள்ள
இருளை அழைக்கிறது !
ஆர்ப்பரித்த கடலை
அள்ளிக் கொள்கிறது
செவ்வந்தி வானம் !

பூமியின்
ஆனந்தக் கண்ணீரோ .....
புன்னகை பூக்க
பனித்துளிகள்
பன்னீரால் வரவேற்க
அரும்பி விழித்த
மொட்டுக்கள் விரிந்து
வாசனையைத் தெளிக்கிறது !

நிர்வாணமாக
நிறவண்ணப் பூக்கள்
ஆனந்த தாண்டவமாடி
முற்றத்தில்
சிரிக்கிறது !

பூமித்தாயின்
சூடு தணிக்க
வானம்
கார்முகில் கூந்தலை
உதிர்த்துக்
கொட்டுகிறது !

கண்ட குளிர்ச்சியில்
மண்மகள்
பெருமூச்செறிந்து
மூர்க்கம் கொள்ள
புதையுண்ட
விதைகள் எல்லாம்
முளை கொள்கிறது !

கச்சையணிந்து
ஒளிந்து
கிடந்த
பார் முழுதும்
பச்சையை உடுத்தி
இச்சை தீர்த்து
குளிர்கிறது !

நிறைந்து வழிந்த
குளங்கள்
செங்கமல மேனிகளை
ஆடையின்றி
தழுவி
மோகித்து கொள்கிறது !

சலசலத்து
முணுமுணுக்க
ஓடிவருகிறது
மலையில் இருந்து
நீள் அருவி !
வெள்ளை மனதை
பறைசாற்ற
வெண் நுரையைக்
கக்கிக் கொண்டு !

நெளித்து நெளிந்து
குளைந்த
நதிக்கரைகள்
வளைந்து
ஓடிக் கலக்கிறது
ஆழ்கடலுள் !

ஆகா ஆகா
என்னே இனிமை
ஆகாயம்
அண்டமெல்லாம்
ஓர் அசைவு !

பென்னம் பெரிய
மரங்களும்
நடனமாதுக்களாக
ஆடிக் கொண்டிருக்கிறது !
உலக மூச்செல்லாம்
உள்ளிழுத்து
கேட்டுக் கொண்டிருக்கிறது !

காற்று பூங்காற்று. ......
கை தட்டிப் பார்க்கிறேன். .....
ஓசை வருகிறது !
அடர் வனங்கள்
பீதியூட்டுகிறது
பேயுலாவும் ஒலியென
மூர்ச்சை இழக்கிறது
ஆத்மாவின்
ஆழமெங்கும் ஆனந்தம் !

கீச்சொலிகள்
கிணுகிணுக்கிறது
உலகமே பிரளும்
பிரளயம் நடக்கிறது
வானரங்கள்
வனக் குலங்கள்
கூடிக் குலாவி
கும்மாளமிடுகிறது !

எல்லாம் இயற்கை
எழில் சூழ்ந்த உலகு
என்னே இனிமை
இயற்கையின் வரவு !

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (24-Jan-16, 4:46 pm)
பார்வை : 369

மேலே