காட்சிப் பிழைகளோடு ரசனை உலா- 2- சந்தோஷ்

காதலை காதலால் பிரமாண்டப்படுத்தி.. வசீகரமான சொற்களின் தேரில் பவனி வருகிறார் காதலாரா எனும் தோழர் இராஜ்குமார்.

இரயிலில் பயணித்தப் போது வாசித்த கவிதையிது..

தேகத்தின் ரோமத்தில்
மோகத்தின் வேகத்தை
வானத்தின் கோபமாக்கி
பாலைவன தாகத்தில் சுடுகிறாய்... // இப்படியான சந்த வரிகளை வாசிக்கும் போது.. இரயிலின் தட தட ஒலி இக்கவிதைக்கு பிண்ணனி இசையமைப்பது போல உணரப்பட்டது. அத்துணை ஒலி நயம்.லயம்.சுகம்.

”புடவியின் விதி தகர்ந்த
கிரக உருவ மலை நுனியில்
என் தாந்திரீக தியானத்தில்
உன்னுடை...தவத்தின் நெறி .”.//

காதலுணர்வில் தவ நெறி கொடுத்த கவிஞர், கவிதையின் படிமங்கள் மீது வெறிப்பிடித்தவர் போல இவரின் காட்சிப்பிழையெங்கும் படிம வித்தைகள்.சந்தம், தாளம் மேலோங்கும் அற்புத கவிதையாக இருக்கிறது. பல வரிகள் கவிஞருக்கும் வாசகருக்கும் புரிதல் பாலம் அமைத்திருக்கிறது . மறுப்பதற்கில்லை. ஆனால். மொழி பேராண்மையோடு ஒரு கவிஞர் இருந்தாலும் பலதரப்பட்ட வாசகர்களுக்கும் புரிவதுப்போல சொல்லும் கருத்தை..எளிமைப்படுத்துவது நன்றென கருதுகிறேன். என் கருத்தில் தவறில்லைதானே..?

எவ்வாறினும்,

“நாமிறந்த இதிகாச இடுகாட்டில்
உன் முதுகு பெரும் ஏடு...
மரணம் எதிர்த்த நம் பாட்டில்
அகிலம் பரிணாம சிறு கோடு...” / முன் ஜென்ம உணர்தலில் காதல் புரவி வேகமெடுத்திருக்கிறது என்பதை பாராட்டாமல் விட்டுவிட்டால் ரசிகனின் ரசனை ஜீரணமாகாது.


--

கவிதை தான் காதலில் தோற்போருக்கு சொந்தமென இயற்கை நியதியாக வர்ணிக்கும் தோழர் நித்யா,


“நாளை எனக்கு திதி
என் மனம் இறந்து
வருடம் ஆனது ஒன்று “..// காதல் நிறைவேறாதவர்களுக்கு உயிர் மரணிக்கும் ஒரு மரணம். மனம் மரணிக்கும் ஒரு மரணம் என இரு மரணமோ. ? சிந்தனை ஆழம்.! மரணங்கள் கூட ஒரு காட்சிப்பிழைதான்


--
எந்தப் பனித்துளியும்
சுடுவதில்லை
உன்னைப் போன்று

பனித்துளி சுடுமா.? குளிர் என்பது குளிரல்ல அது மைனஸ் டிகிரி வெப்பம். ஆக பனியின் சூடு சுகம். பனி சுட்டாலும் அது காதலில் காதலனைப்போல சுடாது என கவிதையை சூடி மகிழ்கிறார் தோழர் கார்த்திகா.

காதலுணர்வுத் தூண்டலில் புலன்களில் விழிகளுக்கு முக்கிய பங்குண்டு. விழிகளே ஹார்மோனைத் தூண்டி.. காதல் விதையை விதைக்கும் பலருக்கும். சிலருக்கு மட்டும் இல்லை.

என் வயலெட் வண்ணப்பூக்கள்
என்னைப் போலவே
உன் பார்வைத் தொடுதல்
அறிந்து நகர்வதேயில்லை

வயலெட் பூக்களின் நேசகியான இவரோடு நாயகனின் பார்வைத் தீண்டலில் அவ் வயலெட் பூவையும் மயங்கவிடுகிறார். அழகு..!

நல்லதொரு காதல் தித்திப்பான கற்பனைக்கு சொந்தக்காரான கார்த்திகாவின் எழுத்து பலதரப்பட்ட காதல் நெஞ்சகளையும் வசியப்படுத்திவிடுகிறது

உன்னில் மூழ்கித்
தொலைந்து உன்னையே
குடிக்கும் என் தாகம் // காதல் தீரா தாகம். அபரிதமான அன்பை எவ்வளவு அழகாக.விரசமின்றி நேர்த்தியாக சொல்லி காதலை கெளரப்படுத்தியிருக்கிறார்.

தோழர் கார்த்திகா.. விரைவில் வெளிச்சமடைவார் இலக்கியத் தீபமாக. நம்புவோம் தீர்க்கமாக..!
--
காட்சிப் பிழைகள் என்பது தலைப்பு. தலைப்புக்கு பொருத்தமாக கனகச்சிதமாக கவிதைகள் செதுக்கியிருக்கிறார் தோழர் இனியவன்.
கஜல் கவிதைகளில் நன்கு அனுபவம் வாய்ந்தவரென அறிகிறேன்.

கண்ணால் காண்பதெல்லாம் பொய். இப்பழமொழியை இப்படி சுட்டுகிறார் பாருங்கள்

”நெற்றியில் ...
குங்கும பொட்டு.....?
அப்பாடா - சாமி ....
கும்பிட்டு வருகிறாள் ....!!!” /// நெற்றியில் குங்குமம். அச்சோ திருமணம் ஆகிவிட்டதா இவளுக்கு.? இல்லை இல்லை சாமி கும்பிட்டுதான் வருகிறாள். ஒரு தலைக் காதல் கொண்டவரின் மனநிலையினை விவரிக்கும் இவ்வரி அசத்தல்.

மூடபழக்க வழக்கங்களையும் சாடுகிறார் கவிஞர் இனியவன்.

”கயிற்றை மிதித்து ...
பாம்பு என்று கத்தினான் ....
நாக தோஷ பூஜை ....
நடக்கிறது .....!!! ”/ கயிறு பாம்பாக காட்சிப் பிழையானதற்கா நாக தோஷ பூஜை..? அடக்கடவுளே ! என சொல்ல வைத்த வரியில் பகுத்தறிவு வாசமும்.


காதல் சுவை. தத்துவ சுவை, நகைச்சுவை என பல்சுவைக்கொண்டது தோழர் கவிஞர் இனியவனின் காட்சிப்பிழை.!

---
நாம் பெருமிதப்படும் அளவிற்கு ஒரு கவிதை விவசாயி எழுத்து தளத்தில் கிடைத்திருக்கிறார். தமிழ் நெல்விதைகள் விதைத்து சொல்நயத்தில் அமோக இலக்கிய விளைச்சலையும் நமக்கு காட்சியாக்குகிறார் இந்த காட்சிப்பிழையில். சொற்களின் தேர்விலும், உவமை, உருவகங்களிலும் பெளர்ணமி நிலவென மிளிருகிறார் தோழர் க.அர.இராசேந்திரன்.

”பெளர்ணமி நிலவிறங்கிய
அரபுநாட்டு பாலை நிலப் பேரிச்சை நீ
என் முல்லை நில இதய வயலுக்குள்
எதை விதைத்துப் போனாய் ?
அறுவடை அடுத்த நாளே.
நெல்லுக்குப் பதிலாய்
பெரும் இச்சை பேரிச்சைகள்.” // தோழர் எழுதிய கவிதையில் இந்த ஒரு கண்ணி போதும். கவிதையின் ரசனையை எடுத்துக்காட்ட. இதயம் கவர்ந்த ஒரு பெண் மீது காதல்.மோகம். இதைத்தான் இப்படி அழகாக வர்ணித்திருக்கிறார். எனது புரிதல் பார்வையில் விளக்கம் தருகிறேன். .
அரபுநாட்டு பாலை நிலப் பேரிச்சை பழம் போன்ற காதலி.. முல்லை நிலமான காதலனின் இதய வயலுக்குள் விதைப்படுகிறாள் , விதைத்தது எதுவென வினவி.. பதிலும் சொல்கிறார் கவனியுங்கள். அறுவடையில் இச்சை பேரிச்சைகளாம். அதாவது காதலி மீதான மோகம் விளைந்திருக்கிறதாம். என்ன ஓர் அற்புதமான கற்பனை வளம். வலம் வருவார் தோழர் இலக்கிய வானில் உச்ச நட்சத்திரமாய். வாழ்த்துக்கள் கவிஞரே..!

--

நேசத்திற்குரியவர் வெறுத்திடும் போது மனம் மரணநிலை நோக்கி ஒரு தாழ்வுமனப்பான்மைக்குள் குடிபுகுந்து கொள்வது இயல்புதான். உலகமே அவளாக மகிழ்ந்திருந்த கனவு பின்னொரு நாளில் பிழையானால் புழவாக தான் துடிக்கும் காதலனின் நெஞ்சம். இதை தோழர் உதயாவின் வரியில் வாசித்து ரசித்தேன்.

நான் வெறும் புழுதான்
என்னை கொல்ல வெடிகுண்டு எதற்கு ...?
எட்டித்தான் மிதியேன்
நீ மிதிப்பதற்க்குள் இறந்துக்கிடப்பேன் .


இப்போதெல்லாம்
உன் பெயருக்கு
என் குருதி ஆடை
நிரந்திரமாகி விட்டது / இரத்தத்தில் காதலி பெயர் எழுதும் முட்டாள்தனமான மனபிறழ்வு நிலை .. இரத்தத்தை ஆடையாக அலங்கரித்த விதம் .சிந்தனை தரம்.

--

”நீ ஆடையாக இருக்கிறாய்
நான் நூலாக இருக்கிறேன்.. என்னுள்
சிக்காமல் நீ சிக்கிக்கொண்டு நான்.” // ஆடையான காதலிணை மீது நூலாக சிக்கிக்கொண்டாராம் தோழர் ஜெய ராஜரத்தினம்.

”ஆயுள்வரை அடிமையாய் போனாய்
அகலிகை போல்...
ராமனாய் வருகிறேன் சாபவிமோசனம் தீர்க்க” காதலியின் சாபம் தீர்க்க ராமனாய் மாறும் காதலன்.
இதில் புராணங்களிலுள்ள காட்சிப்பிழையை சுட்டியது அருமை. தேவலோக தேவன் இந்திரன் கற்புக்கரசியாக இருந்த அகலிகையின் பேரழகில் மயங்கி தந்திரமாக அவளை அடைகிறாள்.கணவன் போல இந்திரன் வந்த காட்சிப்பிழையை நம்பிய அகலிகையை சந்தேகித்து அவளின் கணவரான கெளதம ரிஷியால் கல்லாக இருக்க சபிக்கப்படுகிறாள். பின்னர். ராமனின் காலடிப்பட்டு விமோசனம் பெறுகிறாள். மூன்றடியில் ஒரு பெரிய புராணக்கதையை விரித்த வித்தை மிகவும் கவர்ந்தது..


நிலா இல்லாது எந்த உலக இலக்கியமும் இருக்காது. நிலாவும் காதலும் தான் சில பல கவிஞர்களை உற்பத்தியாக்குகிறது. நிலா பல சிந்தனைகளுக்கு சிறகு கொடுக்கிறது .பல கவிஞர்களிடமும் உலாவிய நிலவு.. தோழர் மெய்யன் நடராஜ் காட்சிப்பிழையிலும் காதலாக உலாவி நம் ரசனையை தழுவிக்கொள்கிறது.

”அழகாய் இருக்கிறது குளம்.
பூத்துவிடக் காத்திருக்கு ஆம்பல்
நீ விடியலில் வருகிற நிலா”.// விடியலில் நிலா. ரசனைமிக்க அழகு காட்சிப்பிழை . விடியல் நிலவென வருகிறவளும் அழகுதானோ . காத்திருக்கும் சுகத்தையும் ஏமாற்றமடையும் வலியையும் மென்மையாக சொல்லும் வரியாக காண்கிறேன்.


”விளக்கை அணைத்தும் பிரகாசமான
நமது முதலிரவில்
உறுதி செய்துகொண்டேன்.
நீல் ஆர்ம் ஸ்ட்ரோங் கால் வைத்தது
வேறொரு கிரகமாகத் தானிருக்க வேண்டும்” // நிலவென அவள். நிலா களங்கமற்றதாக இருக்க வேண்டுமெனில் எவரும் தீண்டியிருக்க கூடாது. அது நீல் ஆர்ம் ஸ்ட்ரோங்காவும் இருந்தாலும்..! . ஒரு கிரகத்தையே காட்சி பிழையாக்கி விட்டீரே கவிஞரே..நியாயமா ?


உன் உதடு உன்னிடமிருந்தாலும்
உன்னால் கொடுக்கமுடியாது
அதற்கு ஒரு முத்தம்.
விட்டுவிடு. அந்தப் பொறுப்பை என்னிடம் /// அடடே..! எப்படியெல்லாம் பொறுப்பாய் இருக்கிறார் கிளுகிளுப்பான கவிஞர்.!! வரியில் வாலிபம் ..

--

மறதி வந்தால் காதலியின் நினைவு போகும். வாழ்க்கை வசந்தமாகும் அல்லவா..? காதலியை மறக்க உங்களுக்கு ஒரு தீர்வு சொல்கிறார் தோழர் அமுதா..!


”மரபணு மாற்றத்தில் தான் மறக்க முடியுமடி உன்னை...!
.....மரணத்தை விடக் கொடியதடி காதல் பிரிவு பெண்ணே...! ” மரபணு மாற்றம் சாத்தியமெனில் மறக்க முடியுமென மருத்துவ விஞ்ஞான பூர்வமாக சிந்தித்த கவிஞருக்கு நிச்சயம் ஒரு பாராட்டு.

எளிமையான சொல்லாடலில் எழிலான காட்சிப்பிழை படைத்த தோழர் அமுதாவின் கவிதை இசைக்கிறது கஜலாக..!--

மணமுடிக்க தீர்மானிக்க முடியாவிட்டாலும் மரணத்தையாவது தீர்மானி நீயென விரக்தியை வெளிக்காட்டும் தோழர் ஆனந்தி.


”ஞாயிறுகளில் தலைகீழாய்
தொங்கும் மாமிச கடை ஆடாய்
ரத்தம் சொட்ட சொட்ட,
உன் நினைவுகளுக்குள் நான்
தடையின்றி தலையின்றி.”.. / பிரிந்து நினைவில் தத்தளிப்பது தொங்கும் ஆட்டின் கொடூர நிலையாய் வர்ணிப்பது தோழர் கவிஜியின் “ ஞாயிறு மறதி” யை நினைவுப்படுத்துகிறார். ஒரே விதமான சிந்தனை. இரு வேறுப்பட்ட கவிஞர்களிடம் காண்பதும் ரசனையே..!

--

கணவன் இழந்த கைம்பெண்ணின் நிலையை காட்சிப்பிழையாக வர்ணிக்கிறார் தோழர் சொ. சாந்தி.


“மாண்ட உயிரை மீண்டும் தரும் மரண தேவன் உண்டோ?
தொலைந்த இன்பம் மீட்டுத் தரும் காவலர்தான் உண்டோ? ” படைக்க பிரம்மத் தேவன் போல மரணத்தை மீட்க மரண தேவனை தேடும் வரியில் முத்திரை பதிக்கும் கவிஞர் .

”அவளைக் காண
தடை விதித்தவர்கள்
காண அழைத்திருக்கிறார்கள்
கடைசியாய்...!!

அவளின் ஆன்மா
சாந்தி அடைய வேண்டுமாம்..!! ”வாழம் வரை காதலை கூட விடாத சமூகம் .. காதலிணை மரணித்து பின்பு பிணத்திற்கு நிம்மதி கேட்பது மூடத்தனம்.


ஒரே நேரத்தில் பலரையும் காதலிக்கும் மோசடி வஞ்சகனை இப்படி பகடி செய்கிறார்.

“நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான்
பாட ஆரம்பித்தோம்
காதலுக்கான வாழ்த்துப் பாடலை..

நான் வாழ்த்து பாடிக்கொண்டே இருக்கிறேன்
அவன் தேசியகீதமே பாடி முடித்துவிட்டிருந்தான்

அவன் வேறு எங்கோ
வாழ்த்து பாடவேண்டுமாம்..!! ” ///

தோழர் சாந்தியின் காட்சிப்பிழை சிறப்பு. புத்தகமாய் தொகுப்பு.
-

கற்பனைக்கு பெயர் பெற்ற கம்பனையே கற்பனையாக காதலியின் கண்ணில் குடிபுகுத்தி அசத்தியிருக்கிறார் தோழர் மணி அமரன்.

“கோடிக் கம்பன் குடியிருக்கும்
நூலகமாய் உன் விழிகள்
தேடித் தேடி தினம் படிக்கும்
வாசகனாய் என் விழிகள்... ” / ரசிக்கதக்க கற்பனை.


”கோழிக் கிண்டலில் கூட புதையல்
எனது கையெழுத்தில் அவள் பெயர்...” புதையல் தான் கவிஞரே... உங்கள் சிந்தனையும்.

--தோழர்களே..!
திருவிழா உலா முடியவில்லை. இன்னும் ரசனையாடுவோம்.

காத்திருங்கள் நாளைவரை..!


----
இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (3-Feb-16, 10:15 am)
பார்வை : 307

மேலே