நீ தவறவிட்ட மூக்குத்தி - கற்குவேல் பா
அணிகலன்
````````````````````
புல்லாங்குழலோடு
ராகம் பாடிய காற்று - உன்
தொங்கட்டான்
கண்ட நொடிகளில் ,
தூரி விளையாட
தன்னைத் ,
தயார் படுத்திக் கொள்கிறது !
~~*
பனிக்காற்றில் ,
விடியல்
மறந்து உறங்கும்
பூக்கள் - உன்
கொலுசின் ஓசையில்
இதழ் விரித்து
உற்சாகம் கொள்கிறது !
~~*
வேலை
முடித்த களைப்பில் - உன்
நெற்றிச்சூடியில்
உறங்கத் தயாராகிறது
பிறைநிலவு !
~~*
நீ
குளத்தில்
தவறவிட்ட மோதிரம் ,
மோட்சம் தருவதாய்
உறுதியளிக்கிறது - அங்குள்ள
மீன்களுக்கு !
~~*
காற்றில்
உதிர்க்கப்பட்ட
மயிலிறகொன்று -உன்
மூக்குத்தியில்
தஞ்சம் கேட்டு
தர்ணா செய்கிறது ,
தெருமுனையில் !
~~*
உன்
வளையல்களுக்கு
வர்ணம் சேர்க்க - தன்
இறக்கை ஒன்றை
வெட்டிக் கொடுக்க
தயாராகிறது - ஒரு
பட்டாம்பூச்சி !
~~*
உன்
கழுத்தில்
தொங்கவிட்டப்பட்ட
மிளகு மாலை ,
இன்றுவரை எழவில்லை ,
மயக்கத்தில் !
~ கற்குவேல் . பா