இழிவென்பது - கற்குவேல் பா
இழிவு
````````````
கடவுளை தரிசிக்க
கோவிலுக்கு வரும் சிறுமியை - அவள்
சாதியப் பெயர் சொல்லி எட்டி உதைக்கும் உன்
உயர் சாதி திமிருக்குள்
ஒளிந்து கிடக்கும் கடவுளிடம் கேள்
எது இழிவு என்று ?
பதில் கூற மறுப்பான் ,
தலை குனிந்து கொண்டே !
~~*
வேலை கேட்டு
அலுவலகத்திற்குள் நுழையும் திருநங்கையை
அவளது ஒட்டுறுப்புகளை பார்த்தவாறே
" நீ என்ன கிழித்துவிடப் போகிறாய் " - என்று
வீதி அலற - வார்த்தைகளை
வீசிக் கேள் ..
உன் முகத்தில்
காரி உமிழ்ந்துவிட்டுச் சொல்வாள் ,
எது இழிவு என்று ?
~~*
இரத்தம் பிழிந்து
பாலூட்டி வளர்த்தவளை
முதியோரில்லம் அனுப்பிவிட்டு - மனைவியின்
முந்தானையை பிடித்துக் கொண்டிருக்கும்
உன் கை விரல்களை துண்டித்துக் கேள்
எது இழிவு என்று ?
உன்னோடு ஜனித்ததற்கு ,
கடைசி சொட்டு இரத்தம் உள்ளவரை ,
கதறி அழுது கொண்டே சொல்லும் !
~~*
அடுப்பங்கரையை
" அலங்கரிக்கப் போகும் உனக்கு படிப்பெதற்கு " - என்று
பெண் குழந்தையின் கல்வியை துண்டிக்கும்
குடிகார அப்பனின் மதுக்குவளையை
பறித்துக் கொண்டு கேள்
எது இழிவு என்று ?
தடுமாறிக் கொண்டே
பதில் கூற தயாராவான் ,
மதுக்குவளையை - நீ
திரும்பத் தருவதாக சொன்னால் !
~~*
அருந்ததி பார்த்து
உன் வீட்டிற்குள் மருமகளாய் நுழைந்தவளை
" வந்தால் வரதட்சணையுடன் வா ,
இல்லையேல் அங்கேயே இருந்து வாழ் "- என்று
பிறந்த வீட்டிற்கே திரும்ப அனுப்பும்
கையாலாகாத கணவனிடம் கேள்
எது இழிவு என்று ?
பதில் கூற மறுப்பான் ,
பல்லிளித்துக் கொண்டே !
~ கற்குவேல் . பா