வெகுளிப் பெண்ணல்லோ - கற்குவேல் பா
வெகுளி
```````````````
நீ முத்தம் கொடுத்த
அதே குழந்தைக்கு
அதே கன்னத்தில் - நானும்
முத்தம் பதித்தேன் என்கிறேன் ;
உங்களுக்கும்
எதிர்வீட்டு அம்முகுட்டியை
அவ்வளவு பிடிக்குமா என்கிறாய் ,
குழாயொளி விளக்காய் !
~~*
நீ சிரிக்கும் போது - உன்
கன்னத்தில் விழும் குழி
அவ்வளவு அழகு என்கிறேன் ;
அவ்வாறே - உன்
அன்னைக்கும் விழும் என்கிறாய் ,
அய்யோ என்றே முட்டிக் கொள்கிறேன் !
~~*
தாவணியில் நீ
இன்னும் அழகாய்
தேவதையாய் தெரிகிறாய் என்கிறேன் ;
சென்ற தீபாவளிக்கு - தந்தை
எடுத்துக் கொடுத்தது என்கிறாய் ,
கொஞ்சமேனும் யோசிக்காமல் !
~~*
காதலை
மறைமுகமாய் தெரிவிக்க
கடிதம் எழுதத் தெரியாதவன் போல்
உன்னிடமே கொடுத்து
எழுதச் சொல்கிறேன் ;
எழுத்துப் பிழைகளிருக்கும்
உங்கள் காதலியை
பொறுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்
என்கிறாய் ,
பொறுமையை இழந்தே விடுகிறேன் !
~~*
எப்படியோ
உன்னை மணமுடித்து ,
கையோடு
ஆனா ? பெண்ணா ?
என்றே கேட்கிறேன் ;
நான் பெண் ,
நீங்கள் ஆண் என்கிறாய் ,
அறிவொளியாய் !
~~*
ஏதோ ஒரு நினைவில்
அல்வாவும் மல்லிகையும்
வாங்கி வருவதாக - உன்
காதோடு சொல்கிறேன் ;
அல்வா வேண்டாம்
பதிலுக்கு - காராபூந்தி
வாங்கி வாருங்கள் என்கிறாய் ,
இந்த இரவும்
வெளிச்சமாகமே உறங்கட்டும் !
-- #கற்குவேல்_பா