மலம்
மலம்
======================================ருத்ரா இ.பரமசிவன்
முகம் சுழிப்பவர்களே
அகத்தின் மும்மலம்
எப்போதும்
சுமந்து திரிபவர்களே!
அதற்காக
"கனகதாரா"நீராட்டு செய்து
காவிச்சாமியார்களின்'கால்களில்
விழுபவர்களே!
இந்த சமுதாயக்கழிவுகளையே
தலையில் தாங்கி
கங்கையை சடைக்குள் தாங்கும்
சிவன்கள் போல்
தூய்மைப்பணியாற்றும்
இவர்களே
நகரும் "கோயில்களாய்" இருக்கையில்
அந்த கல் உருவச் சவங்களை விட்டு
இந்த உயிர்மையின்
உன்னத சுத்தத்தின் குரல்களுக்கு
செவி மடுப்பது தானே முறை?
அதை விடுத்து
எல்லா அசுத்தங்களையும்
உருட்டித்திரட்டி
"புருஷசூக்தம்"என்று
இரைச்சல்களில்
இறந்து கிடப்பதேன்
ஓ மானிடமே!
இவர்கள்
தலைக்கு மேலே சுமப்பதை
அவர்கள்
தலைக்குள்ளே சுமக்கிறார்கள்.
மூளையில் புதிய சிந்தனைகள்
உதயமாகாத வரை
அதே
திருஷ்டாந்தங்களும்
(காட்சி விளிம்புகள்)
வேதாந்தங்களும்
(அறிவு விளிம்புகள்)
முடை நாற்றம் எடுப்பதன் வெளிப்பாடுகளே
இந்த தூப தீப ஆராதனைகள்.
கழிக்க ஒருவன்
அள்ள இன்னொருவன்
இறக்க ஒருவன்
எரிக்க இன்னொருவன்
படிக்க ஒருவன்
அவனுக்கு
படிக்கல்லாய் இன்னொருவன்
என்று
வர்ணங்களின் வாய்க்கால்
வெட்டியவர்களே
நம் சமுதாயப் பிணத்தின்
வெட்டியான்கள்.
கொழுப்பெடுத்தவர்கள்
விளையாடிக்களிக்க
அவர்களை கிச்சு கிச்சு மூட்ட
என்றெல்லாம்
எந்திரங்களை இறக்குமதி செய்யும்
தந்திரவாதிகளே
இதற்கு ஒரு எந்திரம் தருவிக்க
இன்னும் ஏன் தயக்கம்?
எதற்கெல்லாமோ
மேனாட்டு எந்திரப்புரட்சிகள்
பேசுகின்ற நீங்கள்
இந்த நந்தனார்களை மட்டும்
மலம் அள்ளும் "ரோபோ"க்களாய்
வைத்துக்கொண்டு
"ஜன கண மன"...
பாடிக்கொண்டிருக்கிறீர்கள்.
கொட்டகைக்கு ஓடும்
கொத்தடிமைகளே!
காதல் செய்ய மட்டும்
"எந்திரன்" வந்தால் போதும்.
மற்றபடி
எப்போதும்
தலையில் வாளி சுமக்க
நீங்களும்
தயார் ஆகி விடுகிறீர்களே.
சூரியன் தானாக
உங்களுக்கு முளைக்காது?
நீங்களே தான்
அதை செதுக்க வேண்டும்.
அதுவும்
நீங்கள் செதில் செதில்களாக
சிதறிப்போகுமுன்
செதுக்க வேண்டும்.
சிதம்பரம் கோவில் அல்ல!
அக்கினியின் "மகரந்த சேர்க்கையில்"
உன்னிடம்
உருவாகப்போகும் ஒரு
சிவப்பு செர்ரிப்பழம்.
===========================================================