மருதாணி கேட்டா மாமன் பொண்ணு
மரத்தையே முடிச்சிப்புட்டேன்
இலையெல்லாம் பறிச்சுப்புட்டேன்
மச்சா மருதாணி தா எனக்கு
வச்சிபாக்க வேணும்முன்னு
ஒத்த வார்த்த நீ சொல்ல
ஓடிப் போயி பறிச்சு வந்தேன்
மரத்தையே சரிச்சு வந்தேன்.
மழத்தண்ணி கொஞ்சம் விட்டு
மைய பாத்து அரைக்கையில
அம்மிக்கல்லும் அசந்துபோச்சு
என் மாமன் பொன்ன நினைச்சுப் பாத்து
கல்ல சுத்தி சுத்தி வழிச்செடுத்து
கைய சுத்திமுத்தி பாத்துப்புட்டு
நெஞ்சப் பத்திகிட்டே கிட்டப் போனே
ஓடி வந்து என்னத் தொட்டு
கைய நீட்டி கண்ணப் பாத்தா
கொஞ்சம் கிள்ளி கையி வச்சேன்
பாத்துக்கிட்டே மிச்சம் வச்சேன்
கையெல்லா பச்ச சோலை
நா மருதாணி வச்ச வேள
நாழிக தா ரெண்டு போச்சு
பச்ச சோல காஞ்சுந்தா போச்சு
கரைச்சுப் புட்டு பக்கம் வந்தா
கையி ரெண்டும் பூப் பந்தா
கண்ணுக்குள்ள பொன் வண்டா
ஓடுதடி கையக் கண்டே
கையில வண்ணம் தொட்டு எடுத்து
கீழ் வானத்துல வண்ணங் கூட்டப் போறே
வானத்தயே உனக்கெழுதி தாரே...