நானும் ஒரு கவிதையாய்
நீள வானம் முழுக்க
நீல வர்ணம் தீட்டி
அண்ட வெளி தாண்டி
அடியில் மேடை அமைத்தான்
கடலோடு தரை
கை கோர்த்தபடி
மாயமான
மந்திரக் கோலால்
எந்தக் கண்ணுக்கும் புலப்படா
எதோ நிறம் கொண்டு
யாரும் அறியா
மர்ம மொழியில்
என் இறைவனவன்
கிறுக்கிய கவிதைகளில்
நானும் ஒரு வடிவமாய்
கருப்பொருள் பதித்தவன்
வார்த்தை கொண்டு
வரிகளமைக்கும் சுமை தனை
என் வசம் சாட்டி விட்டான்
இறுதி முடிவெல்லாம்
எங்கோ எழுதி வைத்து விட்டு
பாதை தெரிவு செய்யும் பணி
மட்டும் என் கையில்
அத்தனை வாழ்க்கைக்கும்
ஒவ்வொரு அர்த்தம் கொண்டு
எத்தனை கோணங்களில்
மனம் படைத்து
குறுகிய தூரத்தில்
அறிவிருந்தும்
முரண்படும் தன்மை தந்துவிட்டான்
எழுத முயலும் வேலையில்
இன்னும் நான்
அனுபவம் படிக்கிறேன்
புதுப் புதுப் பாடங்கள்
என் நாட்க்குறிப்பில்
நாட்க்களின் போக்கிலான படி
பதித்துக் கொண்டிருக்கிறேன்
எழுதிய பாதியில்
சரி பார்க்கச் சென்ற ஒரு தடவையில்
ஆயிரம் தவறுகள்
அழித்து மீண்டும் எழுத
ஆயுதம் இல்லாது
வெட்டி விட்டுத்
திருத்திக் கொண்டேன்
திருத்தியது இன்னும் வடுவாய்
அப்படியே.....
போகும்
அதன் போக்கில் விடாது
சேரும் தூரத்திற்க்காய்
சிலதை சேமித்துக் கொண்ட படி
போகிறேன்
நகரும் நேரங்களோடு
சேர்த்து...
நானும் ஒரு கவிதையாய்......