கொண்டாடப்படாத காதல்கள்
உயர்வு தாழ்வு பிரிவு - அறியா
உள்ளங்கள் இணையும் உறவு
களவு செய்யும் கனவு - காதல்
களங்கம் இல்லா உறவு
விழியின் வழியே நுழையும் - உள்ளம்
விழிப்பு நிலையிலும் கரையும் - பார்வை
விடையை எழுப்பி வினாக்கள் கேட்கும் - காதல்
கனவில் மட்டும் ஒத்திகை பார்க்கும்
ஆத்மாவின் வடிவென்ன - யாரும்
கண்டதுமில்லை காணப்போவதுமில்லை
யாக்கையென்ற விளக்கினிலே -உயர்
ஆத்மா சோதி எரிந்திடவே
உருகும் நெய்யே காதல் என்று
உணரா மனிதர் சாதல் நன்று
பாதியில் வந்த சாதியும் இங்கு
ஆதியில் வந்த காதலை கொல்லுமோ - ஆத்ம
சோதியில் கலந்திட்ட காதலை அழிக்க
ஆண்டவனே நினைத்தாலும் - அது
தற்கொலைக்கு சமமன்றோ
சாதியென்ன மதமென்ன - குல
தாழ்வுமென்ன உயர்வுமென்ன
பாகுபாடு எத்தனையோ
பாழும் மனிதர் வகுத்தனரே
பழமையான காதல் தீபம்
பாரினிலே எரிந்திடவே
பலியான காதலர்கள்
எத்தனை எத்தனையோ
சொப்பனத்தில் முடிந்து போன காதல்கள் - காதல்
சொல்லியதும் முறிந்து போன காதல்கள் - கால
சூழ்ச்சியினால் சிதைந்து போன காதல்கள் - தோல்வி
பயத்தினால் உயிரை துறந்த காதல்கள்
கொண்டாடப்படாத அப்புனித காதல்களுக்கு
சொற்களால் செய்த மலர் அஞ்சலி
இக்கவிதை.....