செவ்வந்தி தூவும் வானம் அவளால்

செந்திட்டு வானம் செந்தூரம் தூவும்
அத்தி மரமும் பூப்பூத்துப் போகும்
அலையின் சத்தம் மூழ்கியே போகும்
உலகின் வடிவம் நெளிந்தே போகும்
மின்னலும் கறுத்துக் கண்ணுக்குள் போகும்
இடியின் ஒலியும் இன்றோ எட்டிசையாகும்
மேகத்தின் நிழலில் நிலவும் தோன்றும்
கார்கூந்தல் மங்கை கடந்துதான் செல்ல.

பானையில் பொங்கும் பாலாய் சிரிப்பு
பார்வையில் என்றும் மஞ்சளின் இழுப்பு
பொய்கள் பிறக்கையிலே இல்லையே வெறுப்பு
பெண்ணாலே முடியும் எந்நாடியின் துடிப்பு.

ஒரு விழியில் சிறை வைத்து
மறுவிழியில் நீயும் விடுப்ப தேனோ
காதலை நெகிழியின் காதாய் பிடித்து
நீயும் குழியில் வீசுவ தேனோ?

வரும்வழி எங்கும் உன் மணமே
வான்வெளி யெங்கும் உன் நிறமே
குமரிக் கோடாய் என் நினைவும்
மூழ்கிப் போனது உன் கடலில்.

காதலை மடித்து காலடியில் விடுத்தேன்
கண்ணால் நீயும் ஏற்பாய் என்றே
சிக்கிமுக்கி கல்லாய் கண் ஆனதே
உரசாமலே உயிரில் காதல்தீ மூண்டதே.

மான்விழிப் பார்வையால் மாற்றந்தான் என்னில்
சேரநாட்டு மிளகின் வாசந்தான் உன்னில்
வீசுகிறாய் காற்றை கூதல் பேச்சில்
உயிரும் உறைகிறது உந்தன் மூச்சில்.

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (11-Feb-16, 3:51 pm)
பார்வை : 115

மேலே