மாற்றுத் திறனாளிப் போராளியின் நாட்குறிப்பில் இருந்து

கடந்து விட்ட நொடிகளை

மீள் நினைவு படுத்தலில்

காலாவதியாகும் காலங்கள்

எப்போதோ நிலையாக வரையப்பட்ட

எழுதப்படாத விதிகளின்

வீதிகளின் இரைச்சல்களின்

நடுவே எவருக்கும் கேளாமல்

பயணித்துக் கொண்டிருக்கும்.

வெற்றுப் பார்வைக்கு

புலனாகாத் தேற்ற

முடியாத துயரங்களின்

தோற்றங்கள்

இமைகளை அழுத்த

இறுக மூடிய இருட்டுச்

சாளரங்களூடாய்

திகைப்பூட்டும்

இன்னும் விடியாத வாழ்க்கை..

எம் மீது எறிகின்ற கற்கள் எல்லாம்

எந்தச் சலனமும் இன்றி

எம் உணர்வுகளின் ஆழங்களில்

அமைதியாகப் பாதுகாக்கப் படுகின்றன

கரை மீறல்களை அறியாத

நீர்ப்பரப்புக்களாய்....

நிறைவேறாத கனவுகளால்

நிரம்பிய திறக்கப்படாத

எம் நாட்குறிப்பில் போகும் போது

எழுதி விட்டுச் செல்கின்றோம்

எம்மை எரித்துக் கூதல் காய்ந்த

தூரத்துப் பச்சைகளே

உங்கள் மத்தியில்

நாமும் வாழ்ந்தோம் என்று..

எழுதியவர் : சிவநாதன் (11-Feb-16, 10:15 pm)
பார்வை : 42

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே