வேறு நிலாக்கள் 19 - கட்டாரி

திரவங்களினாலான.....!


அழகாயிருப்பதாய்
மொழிகிறேன்...ஏறிட்ட
விழிகளுமாய் நானொன்றும்
அப்படியல்ல என
இமைகள் துடித்து
ஏற்கிறாய்..... !
திமிரோடிருப்பதாய்
மொழிகிறேன்....ஏறிட்ட
விழிகளுமாய் நானொன்றும்
அப்படியல்ல என
இமைகள் துடித்து
மறுக்கிறாய் ....! இரண்டுக்குமான
ஒற்றை வித்தியாசம்
ஒருதுளி கண்ணீர்.....!!!

காதல் பகிரும்
பொழுதெல்லாம் தளும்பித்
திரண்டிருந்த உன்
விழிகளோடு
பார்வைகளால் காமம்
துய்த்திருந்த நாட்களை
சொல்லிக்கொடுக்க சொல்
நம்
படுக்கையறைக்கு.....!


புதுமண நாட்களின்
என் மார்பு ஈரங்கள்
சொல்லிக்கொடுத்து விடும்...
என் வீட்டில் நீ
எப்படி இருக்கிறாயென....
எச்சிலாய் இனித்தால்
சுவைக்கிறாய்...!
கண்ணீராய் கரித்தால்
சுமக்கிறாய்......!


அலுவலகநாள் முற்பகலில்
அவசரச் செய்தியென
வரச் சொல்கிறாய்....!
பதறிச் சென்றிருந்த
எனையமர்த்தி...
விலக்கு தள்ளிப்போய்
விருத்தி வந்திருப்பதாய்
விளக்கேற்றி உணர்த்துகிறாய்....
இரண்டாம் முறையாய்
முதலில் இருந்து
காதலிக்கத் தோன்றுகிறதெனக்கு...!!!

எழுதியவர் : கட்டாரி (15-Feb-16, 5:24 am)
பார்வை : 280

மேலே