அழகை தொலைத்த ஹைக்கூக்கள்
முகநூலில் வெவ்வேறு தினங்களில் சென்ற மாதங்களில் நான் வரைந்த சில வரிகள்..ஹைக்கூக்கள்..கவிதைகள் என்று சொல்லிக் கொள்ள முடியாதவை!
இருப்பினும் பகிர்கிறேன் ..பார்வைகள் படரட்டுமே என்ற எண்ணத்தில்!
5.2.2016
கற்றுக் கொடுத்த தோல்விகள்
பெற்றுக் கொடுத்த வெற்றிகள்
முற்றும் முழுமையானவை !
..
விடியலை வரவேற்கும் பறவைகள்
சேர்ந்து கொள்ளும் மயில்கள் ..
தூரத்தில் பெய்கிறது மழை !
..
28.01.2016
எனக்கான உனது அங்கீகாரம்
வரப்பின் மேல் வளர்ந்த புல்
அதுவா எனக்கு அஸ்திவாரம் ?
..
ஆடு எதிரில் புலி அமைதியாக
விழிக்கும் மான் அருகில்
வேறு உலகம் ..ஒளி அதிகம் !
..
வெளியில் காற்று பலமாக வீசினாலும்
மெழுகுவர்த்தியின் ஒளியில் இருள்
விருப்பமின்றி வெளியேறுகிறது !
..
கதிரவன் ஒளியை மறுக்கவில்லை ..
சுழல்கிறது பூமி ..நாளுக்கொரு முறை
இருளுக்கு கதிரவன் பொறுப்பில்லை !
..
எங்கும் எழுதப்படாத சட்டங்கள் ..
இலை மறைவு..காய் மறைவில்
பொடிப் பொடியாகும் திட்டங்கள் ..!
..
ஆண்டுகள் தோறும் மார்கழிகள்
வரிசையில் வந்து போகும் வரன்கள் ..
கண்ணீர் வரண்ட இருவிழிகள் ..!
..
22.01.2016
மழையின் தூரலில் குறைகிறது ..
நடையின் வேகம் ..சாரலில்
வியந்து பார்க்கின்ற குதிரைகள் !
..
திரும்பத் திரும்ப வந்து ..
அதே மரத்தில் வெற்றி பெறுகிறது
இந்த மரம் கொத்திப் பறவை ..!
...
தேய்ந்தும் ..வளர்ந்தும் ..நிலவு
வருகிறது ..போகிறது ..
பாடங்களோ முடிவதில்லை பள்ளிகளில் !
..
20.01.2016
விடிகாலை நேரம் ..
நடந்து கடந்து போகும்
பல தரப்பட்ட மனிதர்களை
மரத்தின் மேலே கிளையொன்றில்
அமர்ந்தவாறே ..
வெகுநேரமாக வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறது ..
அழகிய மயில் ..
..
பலர் அதன் அழகையும்
சிலர் அதன் அமைதியையும்
ரசித்தபடி கடக்கிறார்கள்..
..
அதனை மயிலும்
ரசிக்கின்றது..
..
ஒருவர் மட்டும்
இதன் கறி
எப்படி இருக்கும் தெரியுமா ..
என்று சிலாகிக்கிறார்
நண்பரிடம்..
..
மயில் பட படவென்று
சிறகடித்து
பறந்து போகிறது ..
அவ்விடத்திலிருந்து ..
..
இப்போது ஒரு முகநூல்
படத்தில் இருந்தபடி
கவிதைகள்
படிக்கும் பல தரப்பட்ட
மனிதர்களை ..
பார்த்துக் கொண்டிருக்கிறது ..!