குழந்தைகளா கூலிகளா

கன்றாகத் துள்ளுமந்த கவின்மிகுந்த வயதினிலே
==கைதிஎனச் சிறைபிடித்துக் கைகளுக்குள் வைத்தே
அன்றாடத் தேவைக்காய் ஆங்காங்கே அடிமைபோல்
==அறிவிழந்து நடத்துகின்ற ஆறறிவு மாக்கள்
ஒன்றாதச் செயலனைத்தும் ஒவ்வாத வகையினிலே
==ஒவ்வொன்றாய் செய்வித்து உல்லாசம் கண்டு
நன்றாக வாழவதற்கே நலிவுற்றுப் போனாரே
==நாட்டுக்குள் அன்னவர்கள் குழந்தைகளா கூலிகளா?

சுற்றாடல் மாசாக்கும் புகையிலையைச் சுற்றவைத்து
==சுந்தரங்கள் கெடுக்கின்ற சூதுகலி யாட்டங்களில்
மற்றற்ற மகிழ்ச்சியெனும் போதையிலே கிடக்கையிலே
==மலிவான வேலைகளை செய்யவிட்டு கூலிக்காய்ப்
பட்டாசும் சுற்றுகின்ற பாவத்தை சுமக்கவிட்டு
==பகலிரவு பாரமால் பலவேலை களைவாங்கி
இட்டம்போல் பிழிந்தெடுக்கும் இழிமனது கொண்டோரே
==இகத்தினிலே அன்னவர்கள் குழந்தைகளா கூலிகளா?

புத்தகங்கள் முதுகினிலே பொதிஎனவே சுமக்கவிட்டு
==பூம்பிஞ்சு வயதினிலே பொல்லாதக் கல்வியிலே
வித்தகராய் வருவதற்கு விரும்புகின்றப் பெற்றோரே
==வில்லாக வளைகின்ற வேதனையில் உழல்கின்ற
மத்தலாமாய் இருபக்கம் அடிவாங்கும் நிலைகொண்ட
==மாணாக்கர் கூட்டமெல்லாம் மண்மேலே மாறாத
கொத்தடிமை கள்போன்று இருப்பதனை காணீரே
==குழந்தைகளா கூலிகளா எனுமுண்மை தெரிந்திடுமே!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Feb-16, 2:08 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 66

மேலே