செல்லரித்த

அக்காவின் கன்னத்தில்
பவுடர் தெரிந்தது....

புழுதியேறிய என்
கால்கள் வெள்ளையாகத் தெரிந்தது...

பெரியம்மாவிற்கு
முன்னத்துப்பல் எடுப்பாகத்
தெரிந்தது....

அத்தை மகள் எனக்குப்
பக்கத்தில்
முறைத்துக் கொண்டிருந்தாள்...

இடது புறமாகச்
சிலுப்பிவிட்டு வழித்துச்
சீவியிருந்தான் மச்சான்....

பெரிய பெல் பாட்டம்
வைத்து மியாமி குஷனோடு
நின்ற மாமா....
தூக்கியிருந்த குழந்தை
யாரெனத் தெரியவில்லை....

வலது கையில் கடிகாரம்
போட்டிருந்தார் அப்பா...

அத்தனை அவசரங்களிலும்
யாரையோ வரவேற்றுக் கொண்டிருந்தாள்...அம்மா..

எல்லோரும் ப்ளாஷ்க்கு
வெறித்திருந்தோம்..

எடுக்கப்பட்ட நாளன்றின்
முகாந்திரங்கள்
நினைவுகளில் இடறாது போயினும்....

பார்த்துக் கொண்டே
இருக்கலாம் போல.... என

நான்கு முனைகளும்
பிசுத்து..... நிறங்கள் வெளிறியதுமான
ஒரு புகைப்படம்...
உங்கள் வீட்டிலும் இருக்கலாம்...

எழுதியவர் : கட்டாரி (20-Feb-16, 11:34 am)
Tanglish : Sellaritha
பார்வை : 94

மேலே