தாய்மொழி காக்க வேண்டும்

வாராத வார்த்தைகளை வாவென்று கூப்பிட்டும்
தேராமல் நிற்கத் தெரிந்தோரே – சீரானத்
தாய்மொழி செந்தமிழ்த் தேனிருக்க ஏனிங்கு
வாய்பேச வேற்று மொழி.

ஆயிரம் கற்று அறிந்தென்ன, துன்பத்தில்
வாயினில் வந்துதிரும் வாக்குகள் – தாயிடம்
நின்றுத் தொடங்கிய நின்முதல் நன்மொழி
ஒன்றால் விளையும் உனக்கு,

கற்றதில் பெற்றதைக் கண்ணெனப் போற்றும்நீ
பற்றுவை தாய்மொழி. பாரினில் – பெற்றதாய்
உற்றுனை நோக்குதல்போல் ஊரார் உனைநோக்கார்
நற்றமிழ் தாயே நமக்கு.

நோய்மொழி தன்னை நுனிநாக்கால் பேசாமல்
தாய்மொழியாம் இன்பத் தமிழ்பேசு. – வாய்பேச்சில்
வார்த்தை மழைபொழிந்து வாழ்நாளில் தாய்மொழிக்
கீர்த்தி அடைதற் கிணங்கு.

*மெய்யன் நடராஜ்.

சர்வதேச தாய்மொழி தினம் இன்று

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (21-Feb-16, 2:45 am)
பார்வை : 1443

மேலே