காதல் கல்யாணம் கூட
" அந்தக் கெரகம் புடிச்ச டி. வி ல அப்பிடி என்னத்தத்தா காட்றாங்களோ .... ! பொழுதினிக்கும் வாயப் பொழந்துட்டு குக்கிக்க வேண்டீது ! அப்பறம் சோத்து நேரத்துக்கு டாண்னு வட்டலத் தூக்கீட்டு வெந்தண்ணிக்குள்ள கால உட்ட மாதிரி பசி பசின்னு குதிக்க வேண்டீது ! எனக்கென்ன ஏழு கையுங்காலுமா இருக்குது ? கூடமாட சப்போட் பண்லாம்னு தோனுதா இந்த மனுசனுக்கு ! "
மின்சாரம் சமையலறையிலிருந்து தொணதொணக்கவும் சம்சாரத்தை தொட்டது போல் உடம்பெங்கும் அதிரத் தொடங்கியது சண்முகனுக்கு . எழுந்து வெளியே வந்து பொட்டிக்கடை நோக்கி நடையை துரிதப்படுத்தினான். நடக்க நடக்க தான் கல்லூரியில் படிக்கும் போது காதலித்த சுமதி ஒரு நாள் இவனிடம் கேட்டது ஞாபகம் வந்தது. " டி. வி. ல என்ன புரோகிராம் உனக்கு புடிக்கும் ?"
இவன் சொன்னான் " பெப்சி உங்கள் சாய்ஸ் ! உனக்கு ?"
" எனக்கும் அதான் புடிக்கும். " என்று சொல்லி பெப்சி உமா மாதிரி அனத்தி அனத்தி சிரித்தாள்.
பெருமூச்சு விட்டு நாம் நினைத்ததெல்லாம் நடக்கவா போகுது என்று ஒரு சிகரெட்டை வாங்கி தன் மனைவியை நினைத்து ஊதிதள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழையும் போது ,ஆள் இல்லாதது கூட தெரியாமல் பேசிக்கொண்டே இருக்கும் மனைவியை பார்த்ததும் மீண்டும் காதலி சுமதி ஞாபகம் வந்தது.
வெளியே எட்டிப் பார்த்தவள் " நான் இங்க பேசிட்டே இருக்கறேன் அதுக்குள்ள முக்குல நின்னு பீடி குடிக்க போயாச்சு "
ஓ .... இவள் ஆள் இல்லேனு தெரிஞ்சுட்டே தான் பேசிட்டு இருந்துருப்பா போலிருக்கு. ரொம்ப முத்திப்போச்சு.
கல்லூரி சுமதி ஒரு நாள் சொன்னாள் " உங்ககிட்ட அடிக்கிற சிகரெட் வாசம் நல்லா இருக்கும் ! எனக்கு புடிக்கும் தெரியுமா !"
தனது வாழ்க்கை இப்படி ஆகும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
எல்லாம் இந்த அப்பனால் வந்தது. " அப்பா நான் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கம்பா. ஒரு வருஷமா லவ் பண்றோம். அவ பேரு சுமதி " என்று இவன் சொன்னதும்
" காதல் கீதல்னு சொல்லீட்டு முன்னால வந்து இன்னொருக்கா நின்னுபாரு இதே எடத்துல வெட்டிப்போட்டு போயிருவன்டா ! மரியாதயா நாஞ்சொல்ற புள்ளய கட்டிக்கோ " என்று சொல்லியிருக்க வேண்டாமா ?
அத விட்டுட்டு பெரிய வள்ளல் மாதிரி " அதுக்கென்ன தாராளமா அந்த பொண்ணயே கட்டிக்க என்று சொல்லி கல்யாணத்தையும் நடத்தி வைத்து விட்டார்.
அப்பனை சபித்துக் கொண்டே வால்யூமை அதிகரித்தான்.
" சோறு ஆயிப்போச்சு போய் கொட்டிக்கலாம் !" என்று சொல்லிக்கொண்டே இவனை பொருட்படுத்தாமல் டி. வி. ரிமோட்டை புடுங்கிக் கொண்டாள் சுமதி.