ஞான வாசிட்டம் - 4
1. செல்வம் :
செல்வம் உலகியல் துன்பமென
முதலில் நின்றிடும் காண்;
அபாயம் நிறை பெருங்குடும்பம்
அலைக்கழிக்கப் படுவது போல்
தொலைத்துவிடும் நமை செல்வம்;
கப்பம்கட்டும் குறுநில மன்னன் ஒருவன்
நல்லோனோ தீயோனோ கவலையின்றி
பேரரசில் அங்கமென ஆக்கிடுவான் பேரரசன்..
செல்வமும் அவ்வழி சென்றே சேர்ந்திடும்
அதனை பெறுபவன் யாரெனப் பாராது!
நல்லோர்தமை நிந்தனை செயும்; செருக்கால்
செல்வம் சிக்குறச் செய்யும் - மனதை
சுழலும் காற்றினூடும்; விரட்டித் துரத்தும்
நமை புழுதியுள் மாணிக்க மெனவாக்கும்
விஷ நாகம் உறையும் மலர்க்கொடி அது!
2. வாணாள் (ஆயுள்) :
வாணாள் என்னும் ஆயுள் துன்பம்
இலைநுனி தொங்கும் நீர்த்துளி யாகும்
சட்டென விழுந்திடும் சொல்லாது என்றும்
ஐம்புலப் பாம்பினால் ஆயுளும் குறையும்
நிலையிலா மெய் என்பதோர் பொய்யாகும் !
வானம் பிளக்கலாம்; காற்றைப் பிடிக்கலாம்
வாணாள் பெருக்கும் ஆவல்தான் அடங்குமோ
இலையுதிர்கால மேகமிது வாழ்வு
அலையினை போலொரு நிலையிலாதது
எண்ணெய் இலாத அகல் விளக்கென் றானது !
துன்பங்கள் நீக்கி உண்மையின் பொருளையே
நாடுவோர் வாணாள் புனிதமென ஆகிடும்
மற்ற தெல்லாம் விலங்குகள் பறவைகள் ஆகும்
அறிவிலாதவர்க்கு கல்வியும் மெய்யறிவிலா தோர்க்கு
உடலும், காமத்திற்கு ஆன்ம ஞானமும் சுமை!
ஆயுள், மனம் , புத்தி , அகங்காரம் சுமைகளென
அறிவோரும் உறவோரும் தொழில் யாவும் சுமை
தீயோர்தம் உறவை துண்டிக்கும் அறிஞரென
வாணாளில் உடலினையே உயிர் நீங்கிடுமோர் நாள்
மரணத்தில் முடிவுறும் இவ் வாணாளும் துன்பம் !