பெரிய அப்பத்தா

பெரிய அப்பத்தாளோட
நெசப்பேரு என்னன்னு தெரியாது..
ஊர்ல எல்லாருக்கும் பெரிய அப்பத்தாதான்..

எப்ப ஊருக்கு போனாலும்
வடக்கு வீதி வழியாத்தா
எங்கூட்டுக்கு போகணும்
பெரிய அப்பத்தா கெளவி
வீட்டுத் திண்ணைமேல
கால நீட்டி உக்காந்து
வெத்தலபாக்கு இடிச்சிட்டே கேக்கும்..
ஏண்டா கருப்புசாமி மவனே..
இப்பத்தா வர்ரயாக்கு..
அப்பனாத்தாள அடிக்கடி வந்து
பாக்கோணுமல்லோ...
உங்கப்பன பெத்து
உங்கப்பத்தா போட்டப்போ
பேறு பாத்தவளே நான்தாங்கண்ணு..
இப்பத்தான நீங்கல்லா அங்கராக்கு
போட்டு சுத்துரீங்கோ..
ஏங்கண்ணு..எத்தன நா லீவுன்னு வரவேப்பா..

ஊர்ல முக்காவாசிப் பேரின்
பொறந்தகதைய சொல்லுவா..
சீனாக் காரன் சண்டைக்கு வந்த வருசம்
மாரியாத்தா நோம்பிக்கு மாவெளக்கு
எடுக்கற வெள்ளிக்கெளம பொறந்தவண்டா உங்கப்பே
இதே கையால தண்ணிவாத்துட்டனாக்கும்..
அப்புறம் காலம் மாறிப் போயி
இந்திராகாந்தி செத்த வருசம்
கூத்தாண்டி நோம்பிக்கு அரவான காவு
கொடுத்து கட்டுமரம் சேந்தப்ப உங்கம்மாவ
நோவெடுத்து கோயமுத்தூரு பெரியாசுப்பத்திரிக்கு
கூட்டிட்டு போயி ஆப்பரேசன் செஞ்சு பொறந்தவன் நீயு..

இந்தவாட்டி லீவுக்கு
ஊருக்கு போனப்போ
வடக்கு வீதிலே
அந்த ஊட்டுக்கு முன்னால
பெரியஅப்பத்தா படத்துக்கு மால போட்டு
பிரசவத்துக்கு இலவசம்னு
ஒரு ஆட்டோ நின்னிட்டிருந்தது..
பெரிய அப்பத்தாளோட பேரனோடது..

எழுதியவர் : ஜி ராஜன் (29-Feb-16, 8:19 pm)
பார்வை : 106

மேலே