நானும் மலடி தான்
காதல் முகிலின் ஜோடிப்பறவைகளே !
ஒரு நிமிடம் கேளுங்கள்
இந்த கொலைகாரியின் குமுறலை..
என் சொல்வேன்..என் கொடுமை..
மானங்கெட்ட சாதிநிலத்தில் மானம்தான் பெரிதென
மகளின் கால்பற்றிய மானஸ்தனுக்கு மத்தியில்
மன்னவன் அவனை நினைத்து மங்காமல்
நான் கட்டிய மனக்கோட்டை மடிந்ததே..!
உற்றார் அனைவரும் அட்சதை தூவிட
மங்கள மேடையில் மாங்கல்ய கழுத்துடன்
அவனருகில் அமர்ந்தபடி தோள் சாய்ந்த
என் கனவு கானல் நீர்போல்
கண் முன்னே கரைந்ததே..!
நான் பாவி..
வாழ்க்கைப் போரில்
பாழாய்ப் போன சாதிக்கு பலியாய்
சாதிக்க துடித்த என்
சகாப்தத்தை முடித்தேன்..
குலப்பெருமை கா என
கும்பிட்ட கைகளுக்கு
குறை தீர்க்க வேண்டி என்
கனவினைக் கலைத்தேன்..
முளைத்த விதைச்செடியில்
திராவகம் தெளித்தது போல்
துளிர்த்த என் காதல் சிசுவை -இந்த
கொடும்பாவி கொன்றேன்..
இனியொரு காதலை நான்
பிரசவிக்கப்போவது இல்லை;
முடிந்துவிட்ட என் காதல் பயணத்தில்
நானும் மலடி தான்..
கண்ணீருடன்,
இனியகவி.