காத்திருப்பு
கனிகளிலே விதைகாய்க்கக் காத்தி ருக்கும்
கரிவைர மணிஆகக் காத்தி ருக்கும்
பனித்துளிகள் பகல்வரத்தான் காத்தி ருக்கும்
பாடங்கள் தரக்காலம் காத்தி ருக்கும்
இனித்திடும்பால் தயிரானால் புளிக்கும் பின்நாள்
எடுத்திடும்நெய் சுவைகாட்டக் காத்தி ருக்கும்
தனித்திருந்து நோவதுதான் காத்தி ருப்பா?
தவங்கூட ஒருவகையில் காத்தி ருப்பே..(1)
மாங்காயின் புளிப்பான சுவையைக் காலம்
மாங்கனியில் இனிப்பாக்கக் காத்தி ருக்கும்
தேங்காயில் இளநீராய் தேக்கி வைத்து
தென்னைகளும் நன்றிகளைக் கா(ய்)த்தி ருக்கும்
வாங்கிவிடும் உயிர்வளியை அனைவ ருக்கும்
வழங்கிடவே தருக்களெல்லாம் காத்தி ருக்கும்
ஏங்காதே மனிதாநீ காத்தி ருக்கும்
இயற்கையுனை காத்திருக்கக் காத்தி ருக்கும்
என் தேசம் என்சுவாசம் என்று நாளும்
எல்லையிலே அரணாகக் காத்தி ருக்கும்
தன்பிள்ளை எழுதிவரும் கடிதம் காண
தாய்மனமோ தவித்தபடி காத்தி ருக்கும்
இன்றுபசி தீர்ந்திடுமா? என்று வாழும்
ஏழ்மையின் எதிர்பார்ப்புக் காத்தி ருக்கும்
இன்னுமெதை எழுதிடுவார் என்று மக்கள்
இசைக்கவிதை மணியொலிக்கக் காத்தி ருப்பார்
இது தினமணி கவிதை மணியில் 29/02/2016 ல் வெளியானது