கல்வி

அறிவொளி தீபம் ஏற்றுவதும்
அறியாமை இருளைப் போக்குவதும்
அறிவுத்திறனை வளர்ப்பதுவும் கல்வியே!

ஆற்றல் பல பெருக்குவதும்
ஆறாம் அறிவை வளர்ப்பதுவும்
ஆற்றாமைதனை அழிப்பதுவும் கல்வியே!

இல்லாமையைப் போக்குவதும்
இறவாத் தொண்டாற்றவும்
இயக்கும் சக்தியாவதுவும் கல்வியே!

ஈகை குணம் அளிப்பதுவும்
ஈடில்லாமல் இருப்பதுவும்
ஈட்டிடும் செல்வம் காப்பதுவும் கல்வியே!

உன்னத மனிதரை ஆக்குவதும்
உரைத்த சொல்லைக் காப்பதும்
உறுதி மனதைக் கொடுப்பதுவும் கல்வியே!

ஊக்கம் பெற்றிட வைப்பதும்
ஊரில் மனிதர் போற்றவும்
ஊன அறிவை மாற்றவும் கல்வியே!

எண்ணம் நன்றாய் விரியவும்
எல்லோரையும் மதிக்கவும்
எங்கும் சென்று சிறப்புறவும் கல்வியே!

ஏற்றம் வாழ்வில் காணவும்
ஏக்கக் கனவைப் போக்கவும்
ஏழு கண்டங்கள் பறக்கவும் கல்வியே!

ஐயம் தெளிய வைப்பதும்-மனிதரை
ஐக்கியமாக்கிக் காப்பதும்
ஐங்கடலினும் பெரியதாம் கல்வியே!

ஒழுக்கங்களைப் பேணிடவும்
ஒற்றுமை தனை வளர்ப்பதுவும்
ஒவ்வொரு மனிதரையும் மதித்திடவும் கல்வியே!

ஓங்கு புகழ் பெற்றிடவும்
ஓய்ந்திடாமல் உழைக்கவும்
ஓதும் திறவுகோலும் கல்வியே!

ஔவையவள் புகழடைந்ததும்
ஔடதமாய்க் கவியா(க்)கியதும் கல்வியே!

அஃறிணையை உயர்திணையாக்கும்
எஃகினைப் போல் உறுதியாக்கும் கல்வியே!

விஜயகுமார் வேல்முருகன்

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (6-Mar-16, 8:21 am)
பார்வை : 49

மேலே