உழவுப் பரம்பரைகள்

தோள்மீது கலப்பை தூக்கி
நெடுந்தூரம் போயுழுது
புண் செய் நிலத்தையும்
நன்செய் நிலமாக்கி
நெற்கதிர் வாசனையை
காதலித்து மகிழ்ந்திருந்தார்கள்
நம் எள்ளுப் பரம்பரைகள்..

வயலில் கதிரறுத்து,
களத்தில் கதிரடித்து
சிதறும் தானியத்தை
பறவை குடும்பங்கள்
கொத்தி உண்ண
அந்தக் காதலில்
நெகிழ்ந்திருந்தார்கள்
நம் கொள்ளுப் பரம்பரைகள்..

பேய்களையும் பூதங்களையும்
கதைகளாக்கிச் சொன்னாலும்
மனிதனோடு மனிதமாய்
கால்நடை விலங்குகளிடமும்
காதலோடு
மகிழ்ந்தே இருந்தார்கள்
பாட்டன் பரம்பரைகள்

முன்னோர்கள் விட்டுப்போன
விளைநில வெளிச்சங்கள்
இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்
விலை நில இருட்டுக்குள்
முடங்கும் பரிதாபம்.

ஒன்று மட்டும் உண்மை...
உலகம் பசியால்
மடியும் தருவாயில்
இவர்களெல்லாம்
உயிரோடு எழுந்து வந்து
தோளோடு கலப்பை சுமந்து
மீட்டெடுப்பார்கள்
பசிவயிறுகள் இல்லாத
சந்தோசத்தை..!

அது வரை
மிச்சமிருக்கும் பூமி மண்ணை
நச்சுக் கலக்காமல்
நாம் காத்து வைப்போம்…
கொஞ்சமாவது
விட்டு வைப்போம்.

எழுதியவர் : க,அர,இராசேந்திரன் (7-Mar-16, 12:37 pm)
பார்வை : 680

மேலே