கொண்டாடப்படாத காதல்கள்

“அடியே... என் பேத்தி சேமியா....... எங்கடி போன....... இங்க வாடி.....” என்றவாறு என்பது வயதைக் கடந்த கருப்பாயி வலது கையில் கைத்தடியோடு வீட்டை விட்டு வெளியே வர, “ஏய்..... கெழவி..... கெழவி....... உன்கிட்ட எத்தன தடவ சொல்லி இருக்கன் என் பேரு சேமியா இல்ல சௌமியாடினு. ஏன்டி கெழவி என்னோட ஃபிரண்ட்ஸ் முன்னாடி என் பேர அசிங்கப்படுத்துர....” என்று தனது பாட்டியின் கன்னத்தை கில்லினாள் ஏழாம் வகுப்பு படிக்கும் சௌமியா.
அடி போடி என் சக்காலத்தி........ சோமியாவோ........... சேமியாவோ....... என் வாயில நொலையுர மாறி பேரு வைடானு சொன்னனே கேட்டானா உன் அப்பன் இப்ப பாரு சக்காலத்தி என் தலமயிர புடிக்க வரா...... என்றவாறு வீட்டின் பின்புறம் சென்றாள் மூதாட்டி
அது இருக்கட்டும்.... சொல்லு கெழவி எதுக்கு என்ன கூப்பிட்ட..... என்று ஓடிப்போய் மூதாட்டியை தடுத்து நிறுத்தினாள் சௌமியா.
அடியே... நீ ஆசையா வளத்த மொசக்குட்டிய கானுமடி....... போய் தொலாவி பாரு.... இல்ல என் புருஷன உரிச்சு வச்ச மாறி இருக்கானே அவன் சோறு போடற நாயி ஒன்னோட மொசக்குட்டிய தின்னு கொன்னு போட்டுரும்டி.... என்றவாறு கண்களின் புருவத்தின் மேல் விரித்த கையை வைத்து தூரத்தில் எங்காவது பேத்தி வளர்க்கும் முயல் குட்டி தெரிகிறதா என கூர்ந்து கவனித்தாள்.
அண்ணா...... அண்ணா........ என் அம்மு குட்டிய காணும்னா....... உன்னோட சோமுதான் எதும் பன்னிருப்பானு பயமா இருக்குணா...... இங்கே பாரேன் உன்னோட சோமுவும் இங்க எங்கயும் காணும் என்றாள் சௌமியா.
சௌமி அது ரெண்டும் எங்காவது விளையாடிட்டு இருக்கும் நீ பயப்படாம போய் விளையாடு நான் படிக்கணும்...... என்றவாறு பணிரண்டாம் வகுப்பு பொதுதேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த சந்துரு அடுத்தப் பக்கத்தைப் புரட்டினான்.
டேய் அண்ணா..... எனக்கு இப்பவே என்னோட அம்மு குட்டிய பாக்கணும் இல்லாட்டி உன்னோட புஸ்தகத்த தரமாட்டேன்...... என்று பேசிக்கொண்டே அண்ணன் படித்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓட, எதிர்பாரா விதமாக திடுக்கிட்டு நின்றாள்.
ஒரு இடத்துல உக்காந்து படிக்காம புஸ்தகத்தை தூக்கிக்கிட்டு எங்க ஒடுற..... என்று தடித்த குரலில் கேட்க, ம்......ம்........ இதுக்கெல்லாம் ஒன்னோட பேத்தி பயப்பட மாட்டா தெரியும்ல..... என்று தாத்தாவின் கையை உதறிவிட்டு மறு கையால் ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு ஓடினாள் சௌமியா. என்பத்தைந்து வயதிலும்கூட பேச்சிலும், செயலிலும் ராணுவ வீரர் போல விறைப்பாக இருக்கும் கோவிந்தன் தனது பேத்தியின் செய்கையால் சிரித்தவாறு செருப்பை கதவருகே வெளியில் விட்டார்.
அம்மா...... சௌமி என்ன படிக்க விடமாட்றாமா....... என்னோட புக்க தூக்கிட்டு ஓடிட்டா....... என்று சமைத்துக் கொண்டிருந்த அனிதாவிடம் கோபமாக சொன்னான் சந்துரு. டேய்... சந்துரு அவளோட அம்மு குட்டியதான் கண்டுபிடிச்சு கொடேண்டா..... வீட்டுக்குள்ள எங்க போனாலும் குறுக்கமறுக்க வர மொயல நானும் ரெண்டுமணி நேரமா பாக்காதது என்னமோ போல இருக்குடா.......... என்றவாறு திடீரென சிந்தனை மாறியவளாய் நெற்றியில் கைவைத்தவாறு மகனைப் பார்த்தாள் அனிதா.
என்னமா.... ஆச்சு.....
ஒண்ணுமில்ல ரொம்ப நேரமா வீட்டுக்குப் பின்புறமா நெறைய காக்கா சத்தம் கேக்குது.... என்றவாறு மீண்டும் சில காகங்களின் சத்தம் காதில் விழுவதை நிதானமாக கவனித்தவாறே வாடா சந்துரு போய் பாக்கலாம் என மகனின் தோளில் கைவைத்து அழைத்துக் கொண்டு வீட்டின் பின் புறம் சென்றாள் அனிதா.
புத்தகத்தை கீழே போட்டுவிட்டு விழித்த விழி மூடாமல் வீட்டிற்கு பின்புறமாய் சற்று தூரத்தில் இருக்கும் புதர் ஒன்றை வெறித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமியா. காகம் ஒன்று இறந்து கிடக்க அதனை சுற்றியவாறே வானத்தில் வட்டமிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தது இருபதுக்கும் மேற்பட்ட காகங்கள். சந்துரு இடது கையால் இறந்து கிடக்கும் காகத்தின் காலை பிடித்து, தூக்கி எறிய கம்பி வேலியை தாண்டி சாலையோரம் இருந்த மாநகராட்சி குப்பைத்தொட்டியில் சரியாக போய் விழுந்தது.
கையை துடைத்தவாறு வாமா...... போகலாம் என சந்துரு கூப்பிட டேய்.... அங்க உக்காந்திருக்கிறது நம்ம சௌமிதான என்று கேட்டு முடிப்பதற்க்குள்.
அம்மா.... இவ எதுக்கு அங்க போய் உக்காந்திருக்கா..... வர... வர..... நாம சொல்லுறது எதையும் கேக்காமாட்டுரா..... என்றவாறு வேகமாக அவளை நோக்கி நடந்தான்.
ஏய்...... சௌமி..... என்னடி ஆச்சு...... ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க என்றவாறு மகளின் கண்ணீரை துடைத்தாள் அனிதா. புதரை நோக்கி நடந்த சந்துரு இரண்டு அடி இடைவெளியில் திடீரென சிலையாக நின்றான்.
மகளும், மகனும் கண்ணீரோடு இருக்கும் நிலையை கண்டவள் தன்னையும் அறியாமல் கண் கலங்கினாள். அப்பவே சொன்னனே யாரு காதுல கேட்டுச்சு இப்போ பாரு சண்டாள நாயி பசிச்சா வேற ஏதாச்சும் தின்னுத் தொலைய வேண்டிதான என்றவாறு அருகில் சென்ற கிழவியும் மறு வார்த்தை பேசாமல் அமைதியானாள்.
முழு உடலும் மண்ணில் சாய்ந்து கிடக்க, நான்கு கால்களும் விறைத்துப் போன நிலையில் ஆசையாக சந்துரு வளர்த்த சோமு நாய் வாயில் நுறை தள்ளியவாறு இறந்து கிடந்தது. அதன் எதிரே பின்னங்கால்கள் இரண்டும் வயிற்றோடு மறைந்திருக்க முன்னங்கால்களின் விரல்கள் மட்டும் தெரிந்தவாறு சோமுவின் முன்பாக கண் இமைக்காமல் நாயைப் பார்த்தவாறே அம்மு குட்டி முயல் அமர்ந்திருந்தது. அதர்க்காவது உயிர் இருக்கிறதே என அறிந்து கொள்ளும் வண்ணம் முயலின் வயிற்றுப்பகுதி மட்டும் மெதுவாக மேலும் கீழுமாக ஏறி இறங்கியது.
சௌமியா முயல் குயல் குட்டியை தூக்கி கையில் வைக்க அது தாவி குதித்து மீண்டும் இருந்த நிலையிலேயே அமர்ந்து இறந்து கிடக்கும் நாயைப் பார்த்தது. சந்துரு அழுதவாறே தாத்தா கோவிந்தனை மண்வெட்டியோடு அழைத்து வந்தான்.
கட்டியிருந்த வேட்டியை முழங்காளுக்கு மேல ஏற்றி கட்டிக்கொண்டு புதருக்கு அருகேயே குழி ஒன்றை தோண்டி அதற்க்குள் சோமுவை தூக்கி வைத்து அதன் மேல் மண்ணைத் தள்ளப் போகும் வேளையில் சந்துரு தடுத்தான், தான் வைத்திருந்த நவீன செல்போனில் குழியில் போடப்பட்ட சோமுவை ஃபோட்டோ எடுத்துக் கொண்ட பின் சந்துருவை ஓரமாக நிற்கச் சொல்லிவிட்டு மண்ணைத் தள்ளி அவ்விடத்தை மேடாக்கினார் கோவிந்தன்.
சௌமியா முயலைத் தூக்கி, தாவி ஓடிவிடாமல் இருக்க நெஞ்சோடு இறுக அணைத்தவாறு எல்லோருடனும் வீட்டுக்குச் சென்றாள்.
என்னதான்ப்பா...... பன்றிங்க........ டிக்கெட் கிடைக்கலானா உடனே சொல்ல மாட்டீங்களா என்றவாறு சுழற் நார்க்காலியில் அமர்ந்தாவாறே மேஜைக்கு அருகில் சென்றார் கதிரவன். கணினியில் இணையதளத்தில் ஆன்லைன் புக்கிங் செய்வதர்க்காக ஏர் இந்தியா வலைதளத்தில் வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்க, முற்றிலும் வாய்ப்பு இல்லை என அறிந்த பின்பு உதட்டைக் கடித்தவாறு எதிரே நின்று கொண்டிருந்த மேனேஜரை திட்டித் தீர்த்தார். இறுதியாக மணி ஐந்தானதும் சுவர் கடிகாரத்தில் மணியடிக்க ம்....... இன்னும் எதுக்கு நீக்கிறீங்க பூட்டிட்டு எல்லாம் கிளம்புங்க என்றவாறு தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் தனியார் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் கதிரவன்.
சீக்கிரம் குளிச்சிட்டு வாப்பா கதிர்........ தோசை ஆறிப்போயிடப் போகுது..... என்றவாறு வள்ளி மகனுக்கு இரவு உணவினை வைத்துக் கொண்டு காத்திருந்தாள். இன்னும் ரெண்டு வருஷம்...... இன்னும் ரெண்டு வருசம்னு....... இப்படியே இருபது வருசத்தக் கடத்திட்டான். வயசும் நாற்பதை தாண்டிடுச்சு இன்னம எவன் பொண்ணு கொடுக்கப் போரான் என் புள்ள வாழ்க்கை இப்படியே என்னவாகப் போகுதோ ஒண்ணும் புரியல..... இந்த கடவுள் அவன் நெத்தியில அப்படி என்னதான் எழுதி இருக்கானோ தெரியல......... என்றவாறு புலம்பிக் கொண்டிருக்கும் தாயின் முன் அமர்ந்து “நீ சாப்பிட்டீயா......” என்றவாறு சாப்பிடத்துவங்கனார் கதிரவன். சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு “எனக்கு என்ன.......” என்று வார்த்தையை இழுக்கும் தாயைப் பார்த்து. போதும்..... போதும்...... நீ எதுக்கு இழுக்குரனு தெரியுது இன்னைக்கும் என் கல்யாணத்தப் பேசி வாங்கிக் கட்டிக்காத என்று சாப்பிட்ட கையை கழுவி விட்டு படுக்கப் போனார்.
இத்தனை நாட்கள் ஓடி வந்து தன்னை பிடிப்பதாய் விளையாண்ட சோமு இன்று இறந்து போனதை அறியாத முயல், சிறிது தூரம் ஓடுவதும் பின் திரும்பிப் பார்ப்பதும், மீண்டும் சிறிது தூரம் ஓடுவதும் பின் திரும்பிப் பார்ப்பதுமாக தன்னை பிடிக்க பின் வரவேண்டிய சோமுவை காணாததால் சோர்ந்து போனது முயல் குட்டி. அதன் செய்கையால் கிழவி வியந்து போனாள்.... ஆம்..... இதுவரை முயலை நாய் கொன்று விடுமோ என்று எண்ணியவள் இன்றுதான் அவ்விரு விலங்குகளுக்குள் இருந்த பாசப் பிணைப்பை உணர்ந்து கொண்டாள். பேத்தி வந்து முயலைப் தூக்கிக் கொண்டு போக உறக்கம் வராமலேயே சோர்ந்து போனவளாய் தரையில் முந்தானையை விரித்து படுத்தாள்.
புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வராமல் இருந்ததால் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்து காற்று வாங்கியவாறு நின்றவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் சிறு வருடல் இருப்பதை உணர்ந்தார் கோவிந்தன். ஆம்..... இறந்து போன சோமு நாய் தனது இரண்டாவது மகள் கீர்த்திகா பள்ளியில் படிக்கும் போது தூக்கி வந்து வளர்த்தது. அவள் வளர்த்த நாயோ இத்தனை வருடம் வாழ்ந்து இறந்து போனது ஆனால் நான் பெற்ற மகளோ என்னுடைய வரட்டு கவுரவத்தால் தன்னுடைய வாழ்க்கையையே வாழ வேண்டிய வயதில் முடித்துக் கொண்டாள்...... என்று கடந்த கால நினைவுகளை எண்ணிப் பார்க்கையில் இதயம் இடிந்து போனதாய் உணர்ந்தார்.
தன்னுடைய மகள் கீர்த்திகா வேறு ஒரு சாதிக்கார பையனை காதலித்ததால் அந்த காதலுக்கு கோவிந்தன் மறுப்பு தெரிவிக்க அவரது மகள் தற்கொலை செய்து கொண்டாள், ஊரே வியக்க அவர் செய்த காரியம் அதை எண்ணிப் பார்க்கும் போதெல்லாம் நாம் ஏன் இன்னும் இந்த உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறோம் என நொந்து போவார், ஆம்....... தூக்கு கயிற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட கீர்த்திகாவிற்கு உயிர் ஊசலாடிக்கொண்டு இருந்த நேரத்தில் உடனே மருத்துவமனை கொண்டு சென்றாள் பிளைக்க வைத்து விடலாம் என ஊர் மக்கள் முயர்ச்சிக்க அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் எல்லோரையும் தடுத்து அரைமணி நேரம் தன் மகள் உயிர் ஊசலாடுவதைக் கண்டும் வேறு சாதிப் பயல தேடிப்போனவ உயிரோட இருக்க வேண்டிய அவசியம் இல்ல என ஆவேசமாய் பேச மரணப்படுக்கையில் இருந்த மகளின் கண்களின் ஓரமாக கண்ணீர் வடிய அடுத்த கணமே உயிர் பிரிந்தது. அந்த நிலையை இன்று எண்ணிப் பார்க்கையில் இதயம் துண்டு பட்டதாய் வலித்தது கோவிந்தனுக்கு. இப்படி ஒரு காரியத்தை செய்த நான் ஒரே சாதிக்குள் காதல் திருமணம் செய்தது காதல் என்ற வார்த்தைக்கே அவப்பேரு என எண்ணியவாறு கதறி அழுதார்.
பின்புறம் தோழில் ஒரு கை பட கண்ணீரைத் துடைத்தவாறே பின் திரும்பிய கோவிந்தனைப் பார்த்து, இனிமே உக்காந்தி கண்ணு தண்ணி விட்டா என் மக வந்துடுவாளா சொல்லுடா சண்டாளப் பயல…… என்று எச்சிலை கணவனின் முகத்தில் துப்பியவாறு கருப்பாயி தன்னுடைய கண்ணீரை துடைத்து கொண்டு படுக்கப் போனாள்.
இரவு மணி பனிரெண்டு ஆனது.
திரும்பிப் படுத்த சௌமியா தன்னோடு அணைத்தவாறு படுக்க வைத்திருந்த அம்முக் குட்டி முயலைக் காணாததால் சத்தம் போட்டு அழுதுவிட்டாள். எல்லோரும் எழுந்து அவளை தேற்ற முயன்றும் முயலவில்லை. அம்முக் குட்டி இல்லாமல் தூங்கமாட்டேன் என்று அடம்பிடித்தாள்.
வீட்டில் அனைத்து மின் விளக்கும் போட்டு எல்லா இடத்தையும் தேடிப் பார்த்தும் எங்கும் காணவில்லை. சந்துரு தன்னுடைய செல்போனில் இருந்த ஸ்டார்ச் லைட்டை அடித்தவாறு வீட்டின் பின்புறம் செல்ல எல்லோரும் அவனைத் தொடர்ந்தனர். அவன் நினைத்தவாறே சோமு புதைக்கப்பட்ட இடத்தில் அம்முக் குட்டி இருப்பது கண்களுக்கு தென்பட்டது. அருகில் சென்று பார்க்க புதைக்கப்பட்ட மண் சிறிதளவு தோண்டப்பட்டு இருந்தது அவற்றின் மையத்தில் அம்முக் குட்டி அமர்ந்திருக்க அதனை சௌமியா தூக்கி அனைத்துக் கொண்டாள். முயலின் தலை தொங்கி விழவும்தான் இறந்திருப்பதை அறிந்து கதறி அழுதாள் சௌமியா.
விலங்குகளுக்குள் இருக்கும் நேசத்தின் அளவில் சிறிது கூட மனிதர்களில் உண்மையாய் இருப்பதில்லை என்பதை உணர்ந்து கொண்ட கோவிந்தன் அமைதியாக
வீட்டிற்கு சென்றார். மகளைத் தேற்றியவாறு அனிதாவும், சந்துருவும் வந்தனர்.
சார், என்னோட நண்பர் ஒருத்தர் திடீர்னு கால் பண்ணி அவர் போகவேண்டிய மலேஷியா ப்ரோக்ராம் கேன்ஸல் ஆச்சுனு சொன்னார் அந்த டிக்கெட்ட உங்களுக்கு புக் பன்னலாமா சார்..... என்று மேனேஜர் கேட்க்க.
வேண்டாம்.... வேண்டாம்...... இன்னைக்கு என்னோட புரோகிராம் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடுங்க..... இங்க வரும்போதுதான் எனக்கு ஒரு அவசர கால் வந்தது..... நான் என்னோட சொந்த ஊருக்கு போகணும் அதுக்கு உடனே தட்கல் டிக்கெட் புக் பண்ணுங்க... என்றவாறு திரும்பி வரும்வரை அனைவருக்கும் உரிய வேலையையும் என்னவென்று கூறிக்கொண்டு இருந்தார் கதிரவன்.
தங்களது அழைப்பு உரிய இணைப்போடு இணைக்கும் வரை தயவு செய்து காத்திருக்கவும் என்ற குறள் ஆங்கிலத்தில் கேட்க சிறிது நேரம் அமைதியாக காத்திருந்தாள். அழைப்பு வருவதை அறிந்ததும் தனது மனைவியாகத்தான் இருக்குமென எண்ணியவாறே அலைபேசியை எடுக்க பெயரைப் பார்த்ததும் மனைவிதான் என உறுதி செய்தான் பாஸ்கர். பேசியவுடன் சரி...... என்றவாறு சிறிது நேரம் கழித்து அழைப்பதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.
என்னப்பா எல்லாம்..... மசமசனு இருக்கீங்க....... மழை வரும்போல இருக்கு..... பொழுது வேற போகப் போகுது.... வயசானக் கட்ட எவ்ளோ நேரம்தான் தாங்கும் காலாகாலத்துல தூக்குவீங்களா என்று ஊர் பெரியவர் ஒருவர் கேட்க்க. வரவேண்டிய ஓரவு எல்லாம் வந்தாச்சுனா தூக்க வேண்டிதான என்று மற்றொருவர் கூறினார். அந்த பொம்முநாட்டிய கூப்புட்டு கேளுங்கயா தூக்கலாமா யாரும் வரனுமானு என்று மூன்றாவதாக ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கேட்க......
“எல்லாம் வந்தாச்சாம் தூக்குற வேலைய பாருங்கயா……” என்று வயதான முதியவள் வார்த்தை அனைவரின் காதுக்கும் எட்டியது. சுற்றிலும் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்த பெண்களில் இருந்து ஏதோ குறள் “ஏண்டி இந்தாளு மருமவன் வெளிநாட்டுல இருந்து இந்த கிழவன பாக்க வர முடியாதுனு சொல்லிட்டானாமே......“ என்று கூற, “அதுக்குதான் நல்ல பயலோலா பாத்து உள்ளூருளே கல்லானம் பண்ணி வைக்கணும்டி......” என்று மற்றொரு குறள் வந்தது.
எல்லோருடைய வார்த்தைகளும் காதுகளில் வந்துவிழ
வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேணும்னு ஒத்த காலுல நின்ன மனுஷன் செத்து கிடக்கும்போதுகூட வந்து பாக்க மனசு வரல பாரு. கேட்டா என்னோட அப்பனா செத்துப் போனது உன்னோட அப்பானு முடிச்சுட்டானே அப்படி வெளிநாட்டுல சம்பாதிச்சு எங்க கொண்டு போயி கொட்டப் போரானோ உங்க அப்பன் என்றவாறு ஒரு கையால் மகளை அனைத்து மற்றொரு கையால் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுகின்ற தன் மருமகளை இறுகப் பற்றி அழுதாள் செண்பகவள்ளி.
உடல் முழுவதும் வெள்ளைத்துணியால் கட்டப்பட்டு நெற்றியில் நாணயத்துடன் மூக்கும், கண்களும் தவிர்த்தவாறு உடலில் வேறெங்கும் இடைவெளி இல்லாமல் பாடையில் தூக்கி வைக்க காத்திருந்த பெரியவர்கள், கடைசியா யாராவது ஒருமுறை பாக்கணும்னா பாத்துக்கோங்க தூக்கம் போறோம் என்று சத்தம் போட, கொஞ்சம் வழிவிடுங்க என்றவாறு ஆள் உயர மாழையுடன் உள்ளே வந்த கதிரவனைக் கண்டதும் கண்ணீரைத் துடைத்தவாறு ஒதுங்கி நின்றாள் அனிதா. இறந்துபோன கோவிந்தன் மீது மாழையைப் போட்ட கதிரவன் பாடையின் ஒருபக்கம் கைபிடித்து தூக்க மற்ற பக்கமும் பல்வேறு ஆண்கள் கைபிடித்து சுடுகாட்டில் பேரன் சந்துரு கொல்லி வைத்து எரித்து விட்டு எல்லோரும் வீடு திரும்பினார்கள்.
இரவு நேரமானதால் வந்தவர்கள் எல்லோரும் சொல்லாமல் அவரவர் ஊருக்கு திரும்பிச் சென்றார்கள். வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த அனிதாவைப் பார்த்ததும் வீட்டை நோக்கி வந்த கதிரவன் வாசலிலேயே நின்றார். இவ்வளவு தூரம் வந்துட்டு விளக்கு பாக்காம போகக் கூடாது.... என்று அனிதா சொல்வதைக் கேட்டு, வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவர் ஏற்றி வைத்திருந்த தீபத்தை தொட்டு வணங்கி விட்டு வெளியே வந்தார்.
கதிரவன் முன்பாக நிதானமாக இருத்த அனிதாவின் விழிகளின் ஓரம் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வார்த்தை எதுவும் பேசாமல் கதிரவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
திடீரென எதிரே நின்று கொண்டிருந்த கதிரவன் மனம் படபடத்தது அனிதாவைப் போலவே. உன்னை மறக்கணும் அதுக்கு எங்காவது தூரமா போகணும்னுதான் இத்தன நாள் சொந்த ஊருக்கே வராம சென்னையிலேயே இருந்தன் இப்படி ஒரு நிலையில உன்ன என்னால பாக்க முடியல, அப்படி இருக்க எப்படி மறக்க முடியும் என்று மனதுக்குள் பேசிக்கொண்டிருக்க, எதிரே இருக்கும் தன்னுடைய சொந்தவீட்டின் இடிந்த நிலையை கவனித்தார்.

முதலில் என் மகன் ஆசையா வளர்த்த நாய் இறந்து போனது, பிறகு மகள் பாசமா வளர்த்த முயல் இறந்து போனது இப்போ என்னோட தங்கச்சி உசுர எடுத்த என் அப்பனும் போய் சேந்துட்டான். என்ன கட்டிக்கிட்ட புருசன் ரெண்டு புல்லய கொடுத்துட்டு வெளிநாடு போனான். இத்தன வருசமா காசு காசுனு.... காசு மேலயே பைத்தியமா இருக்குறானே தவிற செத்துப்போன மாமனார் முகத்தப்பார்க்ககூட வெளிநாட்டுல இருந்து வரல. இந்நேரம் என்ன நீ முழுசா மறந்துருப்பேனு நெனைச்சு இருந்தேன் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அளவுக்கு திடீர்னு வந்து நிக்கிறயே இந்த நிமிசமாவது ஒரு வார்த்தை பேசிட்டு போ கதிர் அந்த சந்தோசத்துலேயே பிள்ளைங்க வாழ்க்கைகாக வாழ்ந்துட்டு போயிடுவேன் பேசாம மட்டும் போயிடாத.... என்று மனதுக்குள் குமுறி அழுதுகொண்டு இருந்தாள் அனிதா.
சாதி வேற வேறயா இருந்தாலும் ரெண்டு பேரும் எதிர் எதிர் வீடு.... பத்தாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் உன்ன நான் பாத்தது கூட கிடையாது... ஏனா.... நீ விடுதியில தங்கி படுச்ச.... எப்படியோ..... பன்னெண்டாவது படிக்கும்போது வீட்டுல இருந்தே டவுனுக்கு படிக்க போன. அப்பப்போ ரெண்டு பேரும் பார்வையிலேயே மனசப் பரிமாறிக்கிட்டு காதலிச்சோம், கடைசிவரை நீயும் உன்னோட காதல என்கிட்ட சொல்லல. நானாவது வந்து சொல்லலாம்னு நெனைக்கும்போதுதான் உன் தங்கச்சி காதல் தோல்வியால தற்கொலை பன்னிக்கிட்டா உன்னோட அப்பா குணம் நல்லா தெருஞ்சதாலதான் நீயாவது உயிரோட நல்லா இருக்கணும்னு ஆசப்பட்டான், அப்படினா நானும் என்னோட காதல சொல்லாமலே இருக்குறது தவிற வேறு வழி இல்லனு யாருக்கும் சொல்லிக்காம ஊற விட்டு போனன்.... என்னமோ தெரியல இன்னைக்கு உன் முன்னாடி நிக்குரன்..... என்று மனதுக்குள் பேசியவாறு அனிதாவைப் பார்க்க நிலைகுழைந்து போனான் அவள் கண்களில் கண்ணீர் அருவியாய் வெளியேறுவதைக் கண்டு.
வாழ்ந்து முடிச்சவங்க யாரும் அவங்க அவங்க வாழ்க்கைக்கு இப்படிதான் இருக்கணும்னு தனக்குத் தானே கட்டுபாடு வச்சுக்கிறது கிடையாது. ஆனா.... சொந்தம் பந்தம் உறவுனு சொல்லிக்கிட்டு மத்தவங்க வாழ்க்கைக்கு மட்டும் ஏகப்பட்ட கட்டுபாடு விதிக்க வேண்டியது, இதனாலதான் அவங்க அவங்க வாழ வேண்டிய வாழ்க்கைய தொலைச்சுட்டு அடுத்தவங்களுக்காக அர்த்தமில்லாத வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு..... என்றாவாறு எண்ணியவள் மனதில் வலிகளை தாங்க முடியாமல் ஒரு நிமிடம் கதறி அழுதுவிட்டாள் அனிதா.
வீட்டிற்குள் இருந்த வயதானப் பெண்கள் ஓடிவந்து, தூக்கிப் பிடித்து பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லவேண்டிய நீயே இப்படி அழுதா நல்லாவா இருக்கு.... என்று அவளைத் தேற்றினார்கள். கதிரவனால் அவள் கண்ணீர் வடிப்பதை பார்க்க அவன் கண்ணிலும் கண்ணீர் அதிகமானது.
வருடம் வருடம் எத்தனையோ திருவிழா பண்டிகைகள் வருகிறது விழாவினை கொண்டாடும் மக்கள் ஒருபுறம் இருந்தாலும், அவ்விழாக்களை கொண்டாட முடியாமல் திண்டாடும் மக்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறே நம்முடையக் காதலும் இறுதிவரை கொண்டாடப் படாத காதலாகவே இருக்கட்டும் என்று மனதில் சொல்லிக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார் கதிரவன்.
கதிரவன் செல்வதைக் கண்ட அனிதா இப்பொழுதாவது போகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா........ என ஏங்கினாள்...... சிறிதும் தூரம் சென்ற கதிரவன் திரும்பி நின்று அனிதாவைப் பார்க்க இருவரின் எண்ணமும் என்னவென்று ஒருவருக்கொருவர் புரிந்தது.

***********************************************************நன்றி********************************************************

எழுதியவர் : மு. குணசேகரன் (7-Mar-16, 1:19 pm)
பார்வை : 579

மேலே