குலைகுலையாய்…
குலைகுலையாய்…!!
*
ஒருநாள் தாத்தா தன் பேரனை அழைத்துக் கொண்டு வயல்வெளி பக்கம் போனார். அங்கு வீசிய காற்றும் வெயிலும் அழகான காட்சிகளும் அவனுக்கு பரவசமாக இருந்தது. அவன் தன் தாத்தாவின் பின்னாடியே பேசிக்கொண்டு நடந்தான். அவன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சலி்க்காமல் பதில் சொன்னார் தாத்தா. ஊருக்கு வெளியிலிருந்த அம்மன் கோயிலை நெருங்குகையில், அங்கிருந்த பெரிய ஆலமரம் அவன் கண்ணில் பட்டது.
உடனே அவன் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேலியாக, “ கோயில்கள்லே குழந்தையில்லாதப் பெண்கள் பிரார்த்தனைத் தொட்டில்கள் கட்டித் தொங்கவிட்டிருக்கிறதைப் பார்த்திருக்கேன். ஆனா அதென்ன தாத்தா ஆலமரத்திலே பெரிசுபெரிசா பலாக்காய் காய்க்கிறாப் போல, நிறையக் காய்ச்சி தொங்குது? ” என்றான்.
பேரனின் கேள்வியினைக் கேட்டு சிரித்துக்கொண்டவர். “ டேய், அது பலாக்காய் இல்லேடா?. சின்னச்சின்ன மூட்டைங்கடா ” என்றார்..
“ என்ன மூட்டைங்கன்னு சொல்லுங்க தாத்தா ” என்றான்.
அதைப்பற்றி எப்படி பேரனுக்கு விளக்கி சொல்வதென்று புரியாமல் திணறினார் தாத்தா?.
“ என்ன தாத்தா யோசிக்கிறீங்க என்று மீண்டும் கேட்டான் ” பேரன்.
அதைப்பற்றிச் சொல்லாவிட்டால் விடமாட்டான் போலிருக்கே, என்று நினைத்துக் கொண்டவர்.
“ பக்கத்திலே வந்து நில்லுடா சொல்றேன் ” என்றார்.
பேரன் அருகில் வந்து நின்றான்.
“ கண்ணா, நீ நகரத்திலே வாழறே. செயற்கைப் பொருள்களோட அதிகம் புழுங்குறே. கிராமத்திலே நடக்கிற எத்தனையோ சம்பவங்க மனசை அதிரவைக்கவே செய்யும்டா டேய், நீ கேட்டியே, அது பலாக்காயுமில்லை. பூசணிக்காயுமில்லே. பசுமாடு எருமைமாடு இருக்கில்லே அதுங்க பிரசவமாயிருந்து கன்னுபோடும். அப்போ அதுங்க கருப்பையிலேயிருந்து கொடிகொடியா சுத்தியிருக்கும் நரம்புகளும் நிறைய ரத்தமும் நீரும் வெளியே வந்து கொட்டும். அந்த சமயத்திலே மாடுங்க எவ்வளவு வலி பொறுத்திருக்கும் பாரு. அப்ப கன்னுக்குட்டி வெளியே வந்து விழுந்ததும், அதை நல்லா துடைச்சி சுத்தம் பண்ணுவாங்க. பிறகு எல்லா கழிவுகளையும் வாரியெடுத்து, கீழே சிந்தாம பாதுகாப்பான கோணிப்பை இல்லேன்.னா துப்பட்டா துணியிலே இறுக்கமா சின்ன மூட்டையா கட்டி கொண்டு வந்து ஆலமரத்திலே ஏறி உயரத்திலே கட்டிட்டுப் போவாங்க. அந்த மூட்டையை பறவைங்க எதுவும் கொத்தி சாப்பிடாது. சேதப்படுததாது. காத்துலேயும் வெயில்லேயும் மழையிலேயும் பாதுகாப்பாயிருந்து, சிலநாள்கள்லே மெல்ல காஞ்சி உதிர்ந்துப்போகும்டா ” என்று விளக்கினார் தாத்தா.
“ நா கேலியா தான் கேட்டேன். ஆனா, நீங்க வாயில்லாப் பிராணிகளின் இயற்கைப் பிரசவத்தில் இத்தனைப்பாடு இருக்கு என்கிறதை நல்லாவே புரியவைச்சிட்டீங்க தாத்தா ” என்றான் பேரன்.
ந.க.துறைவன்.