நதி தேடியப் பயணம்-சுஜய் ரகு
நதி தேடிப் பயணப்பட்ட காற்று
கிளைகளினூடே ஊமை ராகம்
இசைத்தபடித் திரள்ந்திருந்தது
கற்றாளைக் கிடையில் பூத்திருந்த
எருக்க மலர்கள் கூட நாசி சுளித்தன
அதன் மணத்தில்
ஓசோன் பெயரும் தூசிகளோடு
கனத்த காற்றின் அனல் கைகள்
தீண்டச் சகிக்கா மரங்கள் இலைகளுதிர்த்தன
வழியில் தட்டான்களின் வீதியுலாக்
கண்டு சற்றே திரும்பிய காற்றை
மோதிச் சிதைத்தது மணலேற்றிய லாரி
***********
காற்று ஓர் ஒற்றையடிப் பாதையில்
தள்ளாடி மிதந்தது
தன் நதி ஏக்கம் தீர்க்கக் கூடுமென
பெரிதாய் நம்பிய நில நல்லாளோ
வாய் பிளந்து கிடந்தாள்
பறவைகளின் சிறகடிப்பில்
நீர்தெளிப்பு இல்லை
ஈரக் கோவணங்கட்டி நீர் சொட்டும்
மாடுகளோடு வரும் உழவனைக்
காணுதற்கில்லை
உழத்திகளின் முனுமுனுப்புப் பாடலோ
நீர் காக்கைகளின் கூடல் மொழிகளோ
கசிந்துவிடாத அந்தி கசந்திருள்ந்தது
***********
இருட் கூடுடைத்தும் நதி நீந்தவியலா
நிலா அகதியானது மேகத்தில்
நிலா விழுந்து மின்னியப் பூக்களிடம்
குளிரில்லை தொன்ம மணமில்லை
இறுதியாய் ஓர் மயானமடைந்த
காற்று புழுங்கிச் சரிந்தது
நதியொரு மண்மேட்டில்
காற்றொரு மண்மேட்டில்
உலர் பூக்கள் சூழ அயர்ந்து கிடக்க
மானுடத்தின் ஆத்மாக்கள் மட்டும்
அங்கு விடிய விடிய உலாத்துகின்றன
அமானுஷ்யப் பேய்களென.....!!