இரு இதயம் ஒரு மரணம்--முஹம்மத் ஸர்பான்

தேசத்து கவிஞர்களும் என்னை கோபித்தனர்
உன்னைப் போல் பேரழகியை காதலிப்பதால்
என்னவள் இமை பட்டாம்பூச்சிகள் கனவில்
எனக்குள் பறந்திட உனக்குள் தொலைகிறேன்.
***
பருவத்து ஆசைகளை புருவத்தில் பருக்களாக்கினேன்
தினந்தினம் கிள்ளிப்பார்ப்பாய் மெதுவாய் வலித்திட,
முத்துப்பற்கள் விலக புன்னகை செய்யும் செங்கமலம்
போன்ற உன்னிதழில் என் ஆயுளை ரேகையாக்குகிறேன்
***
குழந்தை பார்வையில் காமம் செத்து மடிந்தது
என் நெஞ்சுக்குள் நினைவை புதைத்து தாலாட்டு பாடுகிறேன்
ஆயிரம் தாரகைகள் மின்னிடும் உன் பார்வைகள்
இரவின் பரிதவிப்பாக கனவில் சேலை மாற்றுகிறது.
***
நயாகரா நீர்விழ்ச்சி அருகில் ஒரு குடிசை கட்டிக் கொள்வோம்
நீயும் நானும் சாகும் வரை தோளோடு தோளாய் உறங்கிக் கொள்ள..,
எத்தனை கோடிகள் கொடுத்தாவது தாஜ்மஹால் அருகில்
ஒரு பூந்தோட்டம் அமைப்போம் நம் நினைவுகள் பூவாய் பூத்திட..,
***
ஏழைவீட்டு கவிஞனிடம் மட்டும் காதல் கதை சொல்வோம்
அவனும் ஆயுள் முடிவதற்குள் ஒருத்தியை மனசார காதலிக்க..,
பார்வையிழந்த சிற்பியிடம் எம்மை செதுக்கச் சொல்வோம்
வண்ணம் தெரியாத அவனுக்கும் காதலால் ஒளி கொடுக்க..,
***
என் மகளாக நீயும் உன் மகனாக நானும் வாழ்ந்திட
காமமென்ற நஞ்சு கலக்காத உயிரால் காதலிப்போம்
உன் மரணமும் என் மரணமும் ஒரு நொடியில் நேர்ந்திட
கடவுளிடம் இரு இதயம் கொடுத்து ஒரு மரணம் வாங்குவோம்.
***

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (13-Mar-16, 10:52 am)
பார்வை : 144

மேலே