நூல் – பெயர்க் காரணம்

இன்று நாம் வாசிக்கும் புத்தகங்களுக்கு முதல் பெயர் நூல் என்பதே ஆகும். நூல் என்ற பெயர் எப்படி வந்தது என்று இங்குள்ள இரு வெண்பாக்களின் வழியாக அறிவோம்.

1
பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா – எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூன்முடியு மாறு.

பதவுரை:

தன் சொல் பஞ்சி ஆ – தன் சொற்களே பஞ்சு ஆகவும்
பனுவல் இழை ஆக – செய்யுளே இழை ஆகவும்
செம் சொல் புலவனே சேயிழை ஆ – செம்மையான சொற்களை அறிந்த புலவனே நூற்கின்ற பெண்ணாகவும்
எஞ்சாத வாயே கை ஆக – குறைவில்லாத வாயே (கற்றவற்றை சொல்லும் பேச்சுத்திறன்) கையாகவும்
மதியே கதிர் ஆக – அறிவே நூற்கும் கதிராகவும்
முடியும் ஆறு – முடியும் தன்மையே
மை இலா நூல் – குற்றமில்லாத கல்வி நூலாகும்

என்று நன்னூல் காண்டிகையுரையில் சொல்லப்படுகிறது.

கருத்துரை:

சொற்களே பஞ்சு ஆகவும், செய்யுளே இழை ஆகவும், செம்மையான சொற்களை அறிந்த புலவனே நூற்கின்ற பெண்ணாகவும், குறைவில்லாத வாயே (கற்றவற்றை சொல்லும் பேச்சுத்திறன்) கையாகவும், அறிவே நூற்கும் கதிராகவும் முடியும் தன்மையுடையதே குற்றமில்லாத கல்வி நூல் என்று நன்னூலில் சொல்லப்படுகிறது.

நூலென்பது உவமை ஆகுபெயர். பஞ்சு கொண்டு இழைத்து நூற்கப்படும் நூல் போலச் சொற் கொண்டு தொடுத்து அமைக்கப்படுவதால் நூல் எனப்படுகிறது.

2
உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா – மரத்தின்
கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோன் மாந்தர்
மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு.

பதவுரை:

புரத்தின் உரத்தின் வளம்பெருக்கி – உடம்பினுள் உள்ள (ஞான வளம் பெருகச் செய்து) அறிவின் வளத்தைப் பெருகச் செய்து

உள்ளிய தீமை வளம் முருக்கி – உள்ளத்தில் உள்ள தீமையாகிய (அஞ்ஞான வளத்தைக் கெடுத்து) அறியாமையின் மிகுதியை ஒழித்து

பொல்லா மரத்தின் கனம் கோட்டம் தீர்க்கும் நூல் அஃதே போல் – கெட்ட மரத்தின் கோணலைப் போக்குகின்ற எற்றுநூலின் மாட்சிமை போல

நூல் மாண்பு – கல்வி நூலின் மாட்சிமை

மாந்தர் மனம் கோட்டம் தீர்க்கும் – மனிதரது மனத்தின் கோணலைப் போக்கும்

கருத்துரை:

கெட்ட மரத்தின் கோணலைப் போக்குகின்ற எற்றுநூலின் மாட்சிமை போல, உள்ளத்தில் உள்ள தீமையாகிய அறியாமையை ஒழித்து, உடம்பினுள் உள்ள அறிவின் வளத்தைப் பெருகச் செய்து, மனிதரது மனத்தின் கோணலைப் போக்கும் கல்வி நூலின் மாட்சிமையாகும்.

நூலென்பது உவமை ஆகுபெயர். மரம் முதலியவற்றின் கோணலைத் தீர்த்துச் சரிசெய்யும் எற்று நூல் போல மனத்தின் கோணலைத் தீர்த்துச் செவ்வை செய்வது நூல் எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Mar-16, 9:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 472

சிறந்த கட்டுரைகள்

மேலே