பென்சில் பாக்ஸ்
விடுமுறையில்
அதிகாலையிலே
எழுந்துவிடுகிறார்கள்
குழந்தைகள்
அவர்களின் பாதங்கள்
சாக்ஸ்சும்
பூட்ஸ்சுமின்றி
பூத்துக்கிடக்கிறது
இரண்டுநாட்கள்
கார்ட்டூனாய்
விரிகிறது
அவர்கள் வானம்.
சண்டையையும்
சமாதானத்தையும்
வெகு எளிதாக
விரல் முத்திரையில்
காட்டிக்கொள்கிறார்கள்.
கூப்பிட்டால்கூட
சாப்பிடவராமல்
செப்பு சாமான்களில்
இலையையும்
மண்ணையும்
சமைக்கிறார்கள்.
எங்கேனும்
கூட்டிப்போகச்சொல்லி
அப்பாவின் கழுத்தை கட்டிக்கொள்கிறார்கள்.
அந்தி்ப்பொழுதில்
பட்டம் காண்பிப்பதாய்
மாடிக்கு வரச்சொல்லி
விரல் பிடித்து
இழுக்கிறார்கள்.
சின்ன சின்ன
சண்டையும்
செல்ல மழையுமாய்
விடுமுறையை
அலங்கரித்துவிட்டு
திங்களின் காலையில்
புத்தகமூட்டையும்
லஞ்சுபேக் சகிதமாய்
பாய்
சொல்லிப்போகிறார்கள்
பாவமாய்.
நிலாகண்ணன்